Ponmudi becomes MLA again!

திமுக அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிறை தண்டனை அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார். அப்பொழுது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

Advertisment

2023 டிசம்பர் 21ல் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி 21/12/2023 அன்று காலை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். அதனைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் அவரது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து, சட்டப்பேரவை செயலகம் கூறியதாவது, ‘உச்சநீதிமன்ற நகல் கிடைத்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படும். எம்.எல்.ஏவாக பொன்முடி தொடர்வதாகவும், இடைத்தேர்தல் வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை சார்பில் கடிதம் எழுதப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்கவுள்ளார்.