Pon. Radhakrishnan says We do not see ADMK's exit as a setback

சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று (05-10-23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

Advertisment

அப்போது அவர், ”வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க வெற்றிகரமான ஒரு அடியை எடுத்து வைக்க உள்ளது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாகவும் மோடி தான் பிரதமர் ஆவார். அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 7 மாத காலம் உள்ள நிலையில், அதற்குண்டான வழிமுறைகள் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அதிமுக பா.ஜ.க கூட்டணி குறித்து இந்த கூட்டத்தில் எதையும் பேசவில்லை. பா.ஜ.க வை பலப்படுத்த வேண்டும் என்பதுகுறித்து தான் பேசப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கனவே இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெறச் செய்ய என்னென்ன வழிமுறைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என்று வி.பி.துரைசாமி கூறியது அவருடைய சொந்த கருத்து. அதிமுக வில் 2 கோடி தொண்டர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதனால், 2 கோடி கருத்து வரும். அதே போல், எங்கள் கட்சியில் லட்சக்கணக்கானோர் தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால், லட்சக்கணக்கான கருத்துகள் வரும். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. தமிழ்நாட்டிற்கு என்று தனி பா.ஜ.க.வோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ இல்லை. எனவே, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை என்று கூற முடியாது. அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில்இருந்து வெளியேறியதைநாங்கள் பின்னடைவாகப் பார்க்கவில்லை. பா.ஜ.க ஏற்கனவே தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ.க ஆச்சரியமளிக்கும் வகையில் வெற்றி பெறும்” என்று கூறினார்.