Political leaders congrats eps

Advertisment

இ.பி.எஸ். தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று (28ம் தேதி) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பை வெளியிட்டார். அந்தத் தீர்ப்பில் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இ.பி.எஸ். ஒருமனதாக அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தீர்ப்பு வெளியான உடனேயே பதவி ஏற்றுக்கொண்டார். அதேசமயம், இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி ஓ.பி.எஸ். தரப்பு உடனடியாக மேல் முறையீட்டு மனுவை இரு நீதிபதி அமர்வில் தாக்கல் செய்தது. அதனை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு ஏற்றுக்கொண்டு இன்று விசாரிப்பதாக நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட இ.பி.எஸ்.க்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், “இ.பி.எஸ். தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார்...” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் ஆக பொறுப்பேற்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர், அண்ணன் எடப்பாடியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி, “அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.