Police put BJP executives, including Tamilisai Soundararajan, under house arrest

Advertisment

தமிழ்நாடு மாநில அரசின் டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் நடைபெற்றதாக வெளியான தகவலின் அடிப்படையில், கடந்த 6ஆம் தேதி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில்,​​ மதுபானங்கள் இடமாற்றம் தொடர்பான பதிவுகள், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர், சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமாக ஆர்டர்கள், டாஸ்மாக் விற்பனை நிலையங்களால் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் 30 கூடுதல் கட்டணம் வசூலித்தது போன்ற முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால், டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளில் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அமலாக்கத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர், தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஊழல் விவகாரத்தை கண்டித்து பா.ஜ.க சார்பில் சென்னை எழும்பூர் மைதானத்தில் இருந்து பேரணியாக சென்று சாலமுத்து நடராஜர் மாளிகையில் இருக்கக் கூடிய டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை இன்று (17-03-25) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவிருப்பதாக பா.ஜ.க ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்காக முறையாக அனுமதி கோரி பா.ஜ.க சார்பில் விண்ணப்பம் செய்திருந்தது.

Advertisment

இந்த நிலையில் இன்று கடலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வந்த பா.ஜ.க நிர்வாகிகளை அடுத்தடுத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், பல்வேறு இடங்களில் பா.ஜ.க நிர்வாகிகளை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் வீட்டில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதற்கிடையில், பா.ஜ.க மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.