ramadoss 

பொருளாதாரத்தில் ஏழையாக இருந்தாலும், கொள்கைகளில் பெரும் பணக்காரர் என பா.ம.க. துணைத் தலைவர் அறிவழகன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''இராமநாதபுரம் மாவட்டம் புல்லந்தை கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் கே. அறிவழகன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

Advertisment

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த அறிவழகன் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து என்னுடன் பயணித்து வந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியில் ஒன்றிய செயலாளர், மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாநில துணை பொதுச்செயலாளர், மாநில துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். எந்நேரமும் கட்சி வளர்ச்சி குறித்தே சிந்தித்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மையான தொண்டர்களில் ஒருவர். மறைந்த அறிவழகன் எனக்கும், கட்சிக்கும் மிகவும் விசுவாசமாக இருந்தவர் ஆவார்.

பொருளாதாரத்தில் ஏழையாக இருந்தாலும், கொள்கைகளில் பெரும் பணக்காரர். அறிவழகனை போன்றோர்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் ஆவர். அறிவழகனின் மறைவு இராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறுதிச்சடங்குகளில் பா.ம.க. நிர்வாகிகள் மரியாதை செலுத்துவர்'' என கூறியுள்ளார்.