ADVERTISEMENT

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாமக... ராமதாஸ் 

06:30 PM Jan 03, 2020 | rajavel

ADVERTISEMENT

கட்சி சின்னங்களின் அடிப்படையில் இல்லாமல் சுயேட்சை சின்னங்களின் அடிப்படையில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க. தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் திசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. போட்டியிட்ட இடங்களில் கணிசமான அளவில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி மொத்தம் 36 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களைப் பொறுத்தவரை, போட்டியிட்ட இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி 52.09 விழுக்காட்டு இடங்களை வென்றிருக்கிறது. ஊராட்சி ஒன்றியங்களில் பிற கட்சிகளை விட பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி விழுக்காடு தான் அதிகம். மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்தவரை களமிறங்கிய இடங்களில் 44.44% இடங்களில் வெற்றி வாகை சூடியிருக்கிறோம். இது மிகப்பெரிய வெற்றி என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சில இடங்களில் முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. அப்போது வெற்றி விழுக்காடு உயரும்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான அணி வென்ற இடங்களை விட திமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில் தான் அதிகமாகும். ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நடத்தப்பட்டிருந்தால் அதிமுக அணி தான் முதலிடம் பிடித்து இருந்திருக்கும். திமுக அணி வென்ற இடங்களை விட அதிமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதேபோல், கட்சி சின்னங்களின் அடிப்படையில் இல்லாமல் சுயேட்சை சின்னங்களின் அடிப்படையில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க. தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.


உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அதன் செல்வாக்கையும், வலிமையையும் ஒப்பிடும் போது மிகவும் குறைவான இடங்களில் தான் போட்டியிட்டது. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைத்தார்கள். பா.ம.க.வோ சொந்த வலிமை, கூட்டணி தொண்டர்களின் உழைப்பு, மக்களின் ஆதரவு ஆகியவற்றை மட்டுமே நம்பி களமிறங்கியது. பல இடங்களில் எங்களுடன் இருக்க வேண்டிய நண்பர்களே, எங்களை எதிர்த்து நட்புடன் போட்டியிட்டனர். இவை அனைத்தையும் மீறி தான் பா.ம.க வெற்றி பெற்றுள்ளது. அவ்வகையில் இந்த வெற்றி சிறப்பானது.

ஒவ்வொரு தேர்தலிலும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றும் வழக்கம் கொண்ட திமுக, இம்முறையும் அதிமுக, பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு எதிராக அவதூறுகளையும், பொய்களையும் அள்ளி வீசியது. அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெற்றதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி அதன் வலிமையையும், செல்வாக்கையும் உலகிற்கு நிரூபித்து தலைநிமிர்ந்து நிற்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையாக திகழும் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், இப்போது வென்றுள்ள இடங்களை விட இரு மடங்கிற்கும் கூடுதலான இடங்களில் பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால், தோல்விபயம் காரணமாக அந்த மாவட்டங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கு திமுக தடை வாங்கிவிட்டது. அந்த மாவட்டங்களுக்கு அடுத்த சில வாரங்களில் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் போது அதிமுக - பா.ம.க. கூட்டணி தான் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கூட்டணியாக இருக்கும்; இப்போது தற்காலிகமாக சிரிப்பவர்கள், அப்போது நம்மைக் கண்டு வியக்கப்போவது உறுதி.


இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் உள்ளாட்சி அமைப்புகள் தான். உள்ளாட்சி அமைப்புகள் வலிமையாக இருந்தால் தான் ஜனநாயகம் தழைக்கும். இதை மனதில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெற்றி வெற்ற வேட்பாளர்கள் அனைவரும் செயல்பட வேண்டும். இந்த வெற்றியை அளித்த பொதுமக்கள் தான் தங்களின் ஜனநாயக எஜமானர்கள் என்பதை மனதில் நிறுத்தி, அவர்களின் நம்பிக்கைகளையும், பாராட்டுதல்களையும் வென்றெடுக்கும் வகையில் பாமகவினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி உவப்புடன் ஏற்றுக் கொள்கிறது. அடுத்து நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், தமிழ்நாடு முழுமைக்குமான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள பா.ம.க. தயாராக உள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT