“பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ வேலை செய்யவில்லை” - திலகபாமா பேட்டி!

pmk Thilagapama says I dont work for position or responsibility

பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று (29.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் அன்புமணி இன்று (30.05.2025) முக்கிய ஆலோசனை நடத்தினார். அதே சமயம் அக்கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி ராமதாஸ் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். மேலும் அந்த பதவிக்கு சையது மன்சூர் உசேன் என்பவரைப் பொருளாளராக நியமித்தும் ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளராக சையது மன்சூர் உசேன் இன்று முதல் (30.05.20265) நியமனம் செப்பப்படுகிறார். எனவே இவருக்குக் கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பாமக பொருளாளராக திலகபாமா தொடர்வார் என அன்புமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராகப் பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்குத் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ம.க. பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “மக்கள் பணியாற்றுவதில் பாட்டாளி மக்கள் கட்சியைத் தவிர வலுவான இடத்தில் எந்த இயக்கமும் இல்லை. 2016இல் தோளில் கட்சியின் துண்டை எப்போது அணிந்தேனோ அன்றைய தினத்தில் இருந்து இன்றைக்கு வரைக்கும் பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ வேலை செய்யவில்லை. கடைசி மட்ட தொண்டனாக இருந்து அன்புமணி ராமதாஸ் தலைவர் முன்னெடுப்பில் இருந்து பணியாற்றுவதற்கு நாங்கள் சித்தமாக உள்ளோம். அவ்வளவுதான். இதான் என்னுடைய ஒரே பதில். தொண்டனாக இருந்து செயல்படுவதற்கு எந்த சிக்கலும் இல்லை. யாரும் கேள்வி கேட்க முடியாது தாராளமா செயல்படலாம்” எனத் தெரிவித்தார்.

anbumani ramadoss pmk Ramadoss Thilagabama
இதையும் படியுங்கள்
Subscribe