Advertisment

“இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை” - பாமக நிறுவனர் ராமதாஸ்

pmk ramadoss tweet about governor rn ravi

ஆளுநர் உரையில் சமூகநீதி குறித்த அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றும், அதே வேளையில் புதிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவும்பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று ஆற்றிய உரையில் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கும் சமூகநீதிக் கொள்கை குறித்து உறுதிபட தெரிவிக்கப்பட்டிருப்பதும், போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவை மரபுகளின்படி கூட்டத்தொடரை தொடங்கி வைத்து ஆளுனர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக அமைந்துவிடும் என்பதால் அதை செயல்படுத்த முடியாது என்றும்,தற்போது மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையே தொடரும் என்றும் ஆளுனர்உரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் மிகப்பெரிய சிக்கலாக உருவாகி வருகிறது. வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் எண்ணங்களை எதிரொலிக்கும் வகையில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பதும் மனநிறைவளிக்கிறது. போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்துகிறது.

தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டும்; மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்; பெண்ணையாற்று பிரச்சினைக்கு தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் ஆளுனர் வலியுறுத்தியிருப்பதும் சரியானதே.

பொதுவாக ஆளுனர் உரை என்பது ஒரு மாநில அரசு அடுத்து வரும் ஓராண்டில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தப் போகிறது என்பது குறித்த முன்னறிவிப்பு ஆவணம் ஆகும். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவை குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுனர் உரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.

இவை அனைத்தையும் கடந்து ஆளுனர் உரையின் போது அவையில் நடந்த நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன. தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட உரையில் சில சொற்களையும், இரு பத்திகளையும்ஆளுனர் புறக்கணித்திருக்கிறார். அவரால் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட உரையையே ஆளுனர் முழுமையாக படிக்காததும் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் வலிமை சேர்க்காது. அதேபோல், அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை முழுமையாக அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து படிக்கும் போது, அவை மரபுகளுக்கு மாறாக, ஆளுனர் வெளியேறியதும் சட்டப்பேரவை மரபுகள் மற்றும் நாகரிகத்துக்கு எதிரானது ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரின் ட்விட்டர் பக்கத்தில், “சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரைதமிழ்நாடு இதுவரை கண்டதில்லை” என்றும் பதிவிட்டிருக்கிறார்.

governor Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe