Advertisment

சாதிவாரி கணக்கெடுப்பே ஒரே தீர்வு! ராமதாஸ்

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டை முழுமையாக பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுனர் உரையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. பல ஆண்டுகளாக இத்தகைய வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருவது போதுமானதல்ல; மாறாக, இடஒதுக்கீட்டை காப்பதற்கான பணி விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisment

சமூகநீதியின் தொட்டில் தமிழ்நாடு என்றெல்லாம் பெருமை பேசப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு மீது கடந்த 10 ஆண்டுகளாக கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும். இட ஒதுக்கீட்டின் அளவு 50%-க்கும் கூடுதலாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து சில தொண்டு நிறுவனங்கள் கடந்த 1994-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

ramadoss

அந்த வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடரலாம்; ஆனால், 69% இட ஒதுக்கீடு தேவை என்பதை நியாயப்படுத்துவதற்காக, அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். ஆனால், அதன்பின் 10 ஆண்டுகள் ஆகியும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதன் விளைவாக தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் எந்த நேரமும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அப்போது தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகை விவரம் தாக்கல் செய்யப்படாவிட்டால், தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படக்கூடும் என்பது தான் உண்மை. உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது அல்ல. அதேநேரத்தில் நியாயப்படுத்தக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டால் எந்த நீதிமன்றமும் இட ஒதுக்கீட்டை அனுமதிக்காது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஓராண்டில் நடத்தி முடிக்கும்படி ஆணையிட்டு, பத்தாண்டுகள் ஆகும் நிலையில் இன்று வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததை உச்சநீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது. இத்தகைய சூழலில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதைத் தவிர, தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேறு வழியே இல்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது மட்டுமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு காரணமல்ல. இந்தியாவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்காக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் இடஒதுக்கீட்டு அளவையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதானது என்பது மட்டுமன்றி, எதிர்ப்புகள் இல்லாததும் ஆகும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைக் கொண்டு இரு வாரங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதில் கிடைத்த புள்ளிவிவரங்களை வகைப்படுத்தும் பணியையும் முடித்து விட முடியும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டை அதிகரிக்க சட்ட ரீதியாகவோ, சமூகரீதியாகவோ எந்த எதிர்ப்பும் எழப்போவதில்லை.

கால் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், இப்போது மராட்டியத்தில் 78%, சத்தீஸ்கரில் 72%, ஹரியானாவில் 70% என பல மாநிலங்களில் தமிழகத்தை விட அதிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் இட ஒதுக்கீட்டை தேவைக்கு ஏற்ற வகையில் உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். அதில் கிடைக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

census issue pmk Ramadoss statement
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe