Advertisment

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்! ராமதாஸ் 

ramadoss

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். அதற்கு வசதியாக அலுவல் மொழிச் சட்டத்தை திருத்தி அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த வரைவு அறிவிக்கையை மாநில மொழிகளில் வெளியிடாததற்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிக்கைகள் அனைத்தையும் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வெளியிடும் வகையில், இந்திய அலுவல் மொழி சட்டத்தில் திருத்தம் செய்யும்படி பரிந்துரைத்துள்ளது. இது வரவேற்கக்தக்கது ஆகும்.

Advertisment

ஒரு நாட்டின் அரசு வெளியிடும் அறிவிப்பு அந்த நாட்டில் வாழும் அனைத்து மொழி பேசும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தான் அந்த நாட்டின் மொழிக் கொள்கையும் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அதற்கு எதிரான நிலையே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக்கி விட்டால், அதன்பின்னர் இந்தியைத் திணிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதே இதற்கு காரணமாகும். இது மொழியுரிமை மறுப்பு ஆகும். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

மத்திய அரசின் ஆணைகளும், அறிவிப்புகளும் மக்களை அவர்களின் மொழியில் சென்றடையவும், மக்கள் தங்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் அரசுக்கு அவர்களின் தாய்மொழியில் தெரிவிக்கவும் வசதியாக எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி 19.11.1998 அன்று டெல்லியில் அனைத்துகட்சி தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டை பாமக நடத்தியது. அம்மாநாட்டிற்கான அழைப்பிதழை அப்போது எட்டாவது அட்டவணையிலிருந்த 18 மொழிகளிலும் பாமக தயாரித்திருந்தது. அந்த அழைப்பிதழைப் பார்த்து வியந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

அதுமட்டுமின்றி, அதுகுறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக 2003-ஆம் ஆண்டில் வல்லுனர் குழுவையும் அமைத்தார். ஆனால், ஆட்சி மாற்றத்தால் அந்தக் குழு காலாவதியான நிலையில், அதற்கு காலநீட்டிப்பு வழங்கப்படாததால் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்கும் கனவு நனவாகவில்லை. தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு இயக்கங்களை பா.ம.க. நடத்தியுள்ள நிலையில், இப்போது தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்கும்படி உச்சநீதிமன்றமே பரிந்துரைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ஆட்சி மொழியாக அறிவிக்கப்படாததால், மாநில மொழி பேசும்மக்கள் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்படுகின்றனர்; ஏராளமான வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, தேசிய அளவில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகள் மற்றும் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்ததேர்வுகளை தமிழ் மொழியிலும் எழுத அனுமதித்தால் தமிழகத்தைசேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள். ஆனால், இந்தி பேசும் மாணவர்களுக்கு சாதகமான நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியை அலுவல் மொழியாகவும், ஆங்கிலத்தை இணை அலுவல் மொழியாகவும் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டால் மட்டும்தான் மத்திய அரசின் அனைத்து தகவல்களையும் மக்களால் நேரடியாக புரிந்துகொள்ள முடியும். அப்போது தான் மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் இந்தி பேசாத மக்கள் தங்களுக்குரிய நியாயமான இடத்தையும், பிரதிநிதித்துவத்தையும் பெற முடியும்.

அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடையாத காலத்தில் ஒரு மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. ஆனால், தொலைத்தொடர்பும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்து விட்ட நிலையில் இப்போது எந்த சிக்கலும் இல்லை. உதாரணமாக தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டால் மத்திய அரசின் அனைத்து ஆணைகளும், அறிவிப்புகளும் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும். இவற்றை மொழிபெயர்ப்பதில் இப்போது எந்த சிக்கலும் இருக்க போவதில்லை. சென்னையில் உள்ள மத்திய அரசின் ஊடக அலுவலகங்கள் மூலமாகவே இவற்றை சிறப்பாக மொழிபெயர்க்கலாம். இதேபோல் மற்ற மாநில மொழிகளிலும் எளிதாக மொழிமாற்ற இயலும்.

எனவே, இனியும் தாமதிக்காமல் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையையும், இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். அதற்கு வசதியாக அலுவல் மொழிச் சட்டத்தை திருத்தி அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe