Skip to main content

இ.பி.எஸ். உடன் பா.ம.க. எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
pMK MLA Sudden meeting With EPS

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வந்தது. அதன் ஒரு பகுதியாகத் தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் கடந்த 24 ஆம் தேதி (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் கூட்டணி குறித்து முடிவெடுக்க தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம் நேற்று முன்தினம் (15.03.2024) நடைபெற இருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், தென் சென்னை, சிதம்பரம், தர்மபுரி மற்றும் சேலம் என முக்கிய தொகுதிகளுடன் ஏழு பிளஸ் ஒன் (மாநிலங்களவை பதவி) என முடிவாக உள்ளதாக  சொல்லப்பட்டது.

இதனையடுத்து பா.ம.க. விரும்பும் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா  பதவியையும் ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்..ஏ அருள் இ.பி.எஸ்சை திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

வாக்கு எண்ணிக்கை; சத்யபிரதா சாகு முக்கிய ஆலோசனை! 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Counting of votes Satyapratha Sagu Important Advice

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில்  வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது சிசிடிவி கேமரா வசதிகள், 3 அடுக்கு பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார்.