Advertisment

அதிமுக, பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய சி.வி.சண்முகம் விவகாரம்..! எஸ்.பி.யிடம் மனு அளித்த பாமக எம்.எல்.ஏ..! 

PMK MLA Sivakumar met SP of Viluppuram District and given complaint

Advertisment

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் பாமக எம்.எல்.ஏ.வாக சமீபத்தில் வெற்றி பெற்றவர் சிவகுமார். இவர், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், ‘நான் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பதவியில் உள்ளேன். கட்சியில் நான் சிறப்பாக பணியாற்றியதை கண்டு ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் எனக்கு மயிலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்கள். அதில் போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளேன்.

இந்த நிலையில், எங்கள் கூட்டணி கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகத்தை நான் வெற்றி பெற்ற பிறகு அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்கு முயற்சி செய்தேன். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் அப்போது சந்திக்க முடியவில்லை. தற்போது அவரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். இதை பார்த்த சிலர் என் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், எங்கள் கட்சிக்கு கெட்ட பெயர் வரும் நோக்கத்தில் சில பத்திரிகைகளிலும், மீடியாவிலும் தவறான செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் ஜெயராமன், திமுக ராஜா ஆர்ட்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன. இது எனக்கு பெரும் மன உளைச்சலையும் என் பெயருக்கும் புகழுக்கும் களங்கமும் ஏற்படுத்தியுள்ளது. என்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள், முகநூல் நபர்கள் மறுப்பு வெளியிட வேண்டும். இதுகுறித்து காவல்துறை விசாரணைக்கு உடனடி உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

அப்படி இவர் பெயருக்கு என்ன களங்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து நாம் விசாரித்தபோது, கடந்த 7ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், கட்சியினருடன் இருப்பதை அறிந்த மயிலம் பா.ம.க. எம்.எல்.ஏ. சிவகுமார், அவரை மரியாதை நிமித்தமாக சென்று சால்வை அணிவித்து சந்தித்துள்ளார். இதை வைத்து ஒருசில ஊடகங்களில் இதை ஊதி பெரிதாக்கி உள்ளன. விழுப்புரம் தொகுதியில் சி.வி. சண்முகம், சமீபத்திய தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். அவரது கட்சியில் தீவிர அரசியல் பணிகளை செய்வதற்கு எம்.எல்.ஏ. பதவியில் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்ற நோக்கத்தில் மயிலம் தொகுதியில் பா.ம.க. சார்பில் வெற்றி பெற்ற சிவக்குமாரை ராஜினாமா செய்ய வைத்து அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் சி.வி. சண்முகம் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக அங்கே வெற்றி பெற திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு பலனாக சிவகுமாருக்கு வேறு பல வசதிகளை செய்து கொடுக்கப்போவதாகவும் தகவல்கள் பரபரப்பாக சமூக வலைதளங்களிலும் ஆடியோவாகவும் வைரலானது.

Advertisment

இது குறித்து நாம் அதிமுக தரப்பில் விசாரித்தபோது சி.வி. சண்முகம், இடைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிகவும் கடினம். காரணம் திமுக ஆளும் கட்சியாக இருப்பதால், மேலும் கடந்த 2016 ல் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனார். அதற்கான இடைத்தேர்தல் 2019 நடைபெற்றது. அதில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக சார்பில் சி.வி. சண்முகம் சிபாரிசில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆளும்கட்சி அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற வைத்தனர். அதே பார்முலாவை பயன்படுத்தி மயிலம் தொகுதியில் சண்முகம் போட்டியிட்டால் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக அந்த தொகுதியில் தங்கள் அதிகார பலத்தின் மூலம் கைப்பற்றிவிடும்.

இது போன்ற அரசியல் கணக்குகளை எல்லாம் சி.வி. சண்முகம் போட்டிருப்பார். எனவே இது வதந்தியாக, வேண்டுமென்றே கிளப்பிவிடப்படும் செய்தி. அப்படி சி.வி சண்முகம் கிராமப்புற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்று விரும்பியிருந்தால் விக்கிரவாண்டி அல்லது மயிலம் தொகுதிகளில் ஏதாவது ஒன்று கடந்த தேர்தலிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பார். அப்படிப்பட்ட சுயநல எண்ணம் கொண்டவரல்ல எங்கள் கட்சி மாவட்ட செயலாளர் சி.வி. சண்முகம். சமூக வலைதளங்களில் பல்வேறு புரளிகளை கிளப்பிவிடுவது போல இதையும் கிளப்பிவிட்டுள்ளனர். இதில் துளியும் உண்மை இல்லை என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள் மற்றும் சி.வி .சண்முகத்தின் விசுவாசிகள். இது உண்மையோ பொய்யோ, இந்த தகவல் மிக வேகமாக பரவி பாமக அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

pmk admk CV Shanmugam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe