Advertisment

“பாமகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல..” - ராமதாஸ்

PMK Leader Ramadoss statement about local body election result

Advertisment

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்றுமுதல் (12.10.2021) அறிவிக்கப்பட்டுவருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக 1009, அதிமுக 215, சுயேச்சைகள் 95, பாமக 47 இடங்களைப் பிடித்துள்ளன. அதேபோல், மொத்தம் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக 138 மற்றும் அதிமுக 2 என கைப்பற்றியுள்ளன. இந்நிலையில், 47 ஒன்றிய கவுன்சிலர்கள் இடத்தை பாமக வென்றிருப்பதற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் 47க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளை பாட்டாளி மக்கள் கட்சி கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு சுயேட்சை சின்னத்தில் நடைபெற்றத் தேர்தலில் பெருமளவில் பாமகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட, வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ம.க.வின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தல்கள் தான் ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும். அங்கு வலிமையான ஜனநாயகம் அமைந்தால் கிராமங்களும், மக்களும் முன்னேறுவார்கள் என்பதால், அதற்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது. பா.ம.க.வின் வலிமையையும், பா.ம.க.வினர் ஆற்றிய களப்பணிகளையும் ஒப்பிடும் போது ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல.

Advertisment

ஆனாலும், பா.ம.க.வின் வெற்றி எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையில் பெறப்பட்டது என்பது தான் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்குகளுக்கு பணத்தை வாரி இறைத்தன. வேட்பு மனுத் தாக்கலில் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து கட்டங்களிலும் அரசு எந்திரம் ஆளுங்கட்சியின் கட்டளைகளுக்கு பணிந்தது. பா.ம.க. வென்றிருக்க வேண்டிய பல இடங்களில் முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டன. பா.ம.க. இப்போது வெற்றி பெற்ற இடங்களில் பலவற்றிலும் கூட முடிவுகளை மாற்ற முயற்சிகள் நடந்தன. அதை எதிர்த்து மாவட்டத் தேர்தல் அதிகாரி முதல் மாநிலத் தேர்தல் ஆணையர் வரை பல்வேறு நிலைகளிலும் போராடித் தான் முடிவுகளை அறிவிக்க வைக்க முடிந்தது. இவை அனைத்துமே போராடிப் பெற்ற வெற்றிகள் ஆகும்.

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d8bcbf41-1bd8-4ead-82ee-62f110c30a0d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_39.jpg" />

அந்த வகையில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ம.க. பெற்றுள்ள வெற்றி கவுரவமானது; மரியாதைக்குரியது ஆகும். பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிட்ட போதிலும், ஆளும் திமுக, ஆட்சி செய்த அதிமுக ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பா.ம.க.வை அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், வெற்றியை பெற முடியாமல் போனவர்களும் நமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலம் அடுத்து வரும் தேர்தல்களில் பொதுமக்களின் ஒரே தேர்வு பா.ம.க. தான் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

local body election Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe