Advertisment

முதுமை வாட்டினாலும், கோலூன்றி நடந்தாலும் மக்களுக்காக போராடி உயிரை விடுவேன்! ராமதாஸ் உருக்கம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் 80-ஆவது பிறந்தநாள் விழா முத்து விழாவாக சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் அரங்கில் நடைபெற்ற முத்துவிழாவில், ராமதாஸுடன்இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு, அந்தந்தப் பகுதிகளில் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய 500-க்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனிப்பட்ட முறையில் தனித்தனியாக சந்தித்து கவுரவித்தார்.

Advertisment

ராமதாஸ் மற்றும்அவரது துணைவியார் சரஸ்வதி அம்மையார் அவர்களும் கேக் வெட்டி முத்து விழாவைக் கொண்டாடினார். இந்த விழாவில்அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. முன்னாள் தலைவர் தீரன், இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்ற பு.தா. அருள்மொழி, ஏ.கே. மூர்த்தி, கோமதி அம்மாள், சக்தி கமலாம்பாள், வேங்கைப் புலியன், நல்லி இராமநாதன், டெல்டா நாராயணசாமி, கவிஞர் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

Advertisment

விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள் ஆற்றிய உரை:

நான் நெருப்பை வணங்கிப் பேசத் தொடங்குகிறேன். நெருப்பு, அக்கினி தான் நமது அடையாளம். நாம் அதிலிருந்து வந்தவர்கள் தான். நான் கீழ்சிவிரி கிராமத்தில் புகழ்பெற்றக் குடும்பத்தில் பிறந்தேன். எனது பாட்டானார்கள் முனிவரைப் போல வாழ்ந்தவர்கள். நான் மருத்துவம் படித்து மருத்துவர் ஆனேன். அப்போது ஏற்பட்ட சிறு பொறி தான் இந்த அமைப்பையும், கட்சியையும் உருவாக்கியது.

அந்தப் பொறியை ஊதிப் பெரிதாக்கியவர்கள் நீங்கள் தான். நாம் எப்படியெல்லாம் போராடினோம் என்று இங்கு பேசிய தீரன் கூறினார். ஆனால், நமது வரலாறு மறைக்கப்படுகிறது. நாகப்பன் படையாச்சியின் வரலாற்றை மறைத்தவர்கள், இப்போது நமது வரலாற்றையும் மறைக்கிறார்கள். கொச்சைப் படுத்துகிறார்கள். அந்த வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பேராசிரியர் தீரன் எழுத வேண்டும். தீரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு வந்திருக்கிறார். அவரிடம் நான் கூறினேன். காலம் நம்மை பிரித்து விட்டது என்று. சில சூழ்ச்சியாளர்களும் இதன் பின்னணியில் இருந்தனர். இங்கு பேசும்போது கூட அவர் உங்கள் கட்சி என்று கூறித் தான் பேசினார். இனி அவர் நமது கட்சி. நம்முடன் தான் அவர் இருப்பார்.

pmk

பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடும் வழக்கம் எனக்கு இல்லை. என்னுடைய 80-ஆவது பிறந்த நாள் முத்து விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை அழைத்து நடத்தலாம் என்று அன்புமணியும், ஜி.கே.மணியும் என்னிடம் கூறினார்கள்.

இப்போதுள்ள பிரதமர் நரேந்திர மோடி என்மீது அலாதியான பிரியம் வைத்திருப்பவர் ஆவார். முதலமைச்சருக்கும் அலாதி பிரியம் உண்டு. இன்று காலையில் எனக்கு வாழ்த்துச் செய்தி, மலர்க்கொத்து கொடுத்து அனுப்பி எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவ்வாறு இருக்கும் நிலையில், எனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைத்திருந்தால் நிச்சயமாக வந்திருப்பார்கள். ஆனால், நான்தான் என்னோடு போராடிய, சிறை சென்ற பாட்டாளிகளோடு இணைந்து விழா கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதைத் தொடர்ந்துதான் இந்த விழா இப்படி நடைபெறுகிறது. அவர்கள் கலந்து கொண்டிருந்தால் இந்த விழா சடங்காக நடந்திருக்கும். இப்போது நடப்பது போன்று நடந்திருக்காது. வேறு எந்தக் கட்சித் தலைவர் மீதும் தொண்டர்கள் இப்படி பாசம் வைத்திருக்க மாட்டார்கள். பாட்டாளிகள் என் மீது காட்டி வரும் பாசத்தை என் மறைவு வரையிலும் மறக்க மாட்டேன்.

பாரதியார் பாடினார்....

‘‘அச்சமும் பேடிமையும்

அடிமைச் சிறுமதியும்

உச்சத்திற்க் கொண்டாரடி - கிளியே

ஊமைச் சனங்களடீ’’

- அத்தகைய ஊமை சனங்களுக்காகத் தான் 1980-ஆம் ஆண்டு முதல் நானும் தீரனும் மற்றவர்களும் போராடி வந்திருக்கிறோம். அவர்களுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாய மக்களுக்காகவும், மண்ணுக்காகவும், மொழிக்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளோம். எங்களின் போராட்டம் மிகவும் கடுமையாகத்தான் இருந்தது. உணவும் இல்லாமல், உறக்கமும் இல்லாமல் மக்களுக்காக நாங்கள் போராடினோம். ஏனோ, தமிழ் மக்கள் இன்னும் அங்கீகாரம் கொடுக்கவில்லை. அன்புமணி போன்ற தலைவரைக் காட்டுங்கள் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டேன். ஆனால், ஊடகங்கள் மறைக்கின்றன. இதுதொடர்பாக விவாதம் நடத்தவும் பலரை அழைத்தோம். ஆனால், எவரும் வரவில்லை. இந்தச் சூழ்ச்சிகள் எத்தனை நாள் பலிக்கும்? பாரதத்தில் சகுனி வெற்றி பெற்றானா? எத்தனை சகுனிகள் சூழ்ச்சிகள் செய்தாலும், எதிர்காலம் பாமகவுக்குத்தான். நிச்சயம் அன்புமணி மாற்றத்தை ஏற்படுத்துவார். அதற்காக பாமகவினர் அனைவரும் உழைக்க வேண்டும்.

இந்த மக்கள் ஊமை ஜனங்களாகவே நீடிக்க வேண்டும் என்று அப்போதிருந்த ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். நீதிக்கட்சி, திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளும் மக்களை அப்படித் தான் வைத்திருந்தன. ஊமை ஜனங்களை ஓட்டு போடவும், கொடி பிடிக்கவும் மட்டும் தான் பயன்படுத்திக் கொண்டனர். 1980-ஆம் ஆண்டுக்கு பிறகு நான் நிலைமை மாறியது.

முதுமை என்னை எவ்வளவுதான் வாட்டினாலும், கோல் ஊன்றி நடந்தாலும் இந்த ஊமை ஜனங்களுக்காகவும், மக்களுக்காகவும் போராடி உயிரை விடுவேன் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன். இதுவே, எனது முத்துவிழா செய்தி.

இவ்வளவு போராடினாலும் நாம் இலக்கை அடைந்தோமா? அடையவில்லை. இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டும், நமக்கு ஒரு கோடி இளைஞர்கள் உள்ளனர். பாமகவின் இலக்கை அடைய ஒரு கோடி இளைஞர்களைச் சந்தியுங்கள். பாமகவின் வரலாற்றை அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களை அன்புமணியின் பின்னால் திரளச் செய்யுங்கள். அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை ஆகியவை கடுமையாக உழைக்க வேண்டும்; இலக்கை எட்ட வேண்டும். இவ்வாறு உரையாற்றினார்.

birthday pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe