கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு, கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380- லிருந்து 29,435 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 886- லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,362- லிருந்து 6,869 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாமகவின் ராஜ்யசபா எம்.பி அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், குடிப்பழக்கம் ஒழிந்தால்தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும்; வேலைவாய்ப்பு பெருகும்; வறுமை விலகும்; குடும்பங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடும். இவை சாத்தியமாக, கரோனா ஊரடங்கு ஆணை விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.கரோனா ஊரடங்கு முடியும் நாளில் இருந்து, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மதுக்கடைகள் மூடப்படுவதால் அதிகபட்சமாக, 10 மது ஆலை நிறுவனங்கள் மட்டும் தான் பாதிக்கப்படும். ஆனால், ஒன்றரை கோடி குடும்பங்கள் இதனால் நிம்மதியாக வாழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.