Skip to main content

இதனால் என்ன பயன்... அச்சமாக இருக்கிறது... எடப்படியால் அதிருப்தியான அன்புமணி ராமதாஸ்! 

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

இந்தியாவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அந்த வரிசையில் தமிழகத்திலும் இன்று (24/03/2020) மாலை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் அரசு அறிவித்த 144 தடை உத்தரவும் இன்று மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களும் அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஊழியர்களுக்கு விடுப்பு, வீட்டில் இருந்தே பணிபுரிய ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். 
 

pmk



இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கை குறித்து பாமகவின் ராஜ்யசபா எம்.பி அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்றுமுதல் 31 ஆம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. ஆனாலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை முழுமையாக தடுக்க அரசு வகை செய்யப்படாதது ஏமாற்றம் தருகிறது. கடந்த 4 நாட்களில் கொரோன நோய்ப்பரவல் 165% அதிகரித்திருக்கிறது. இது அச்சமளிக்கும் வேகம். அதனால்தான் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு 19 மாநிலங்கள் ஊரடங்கைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் மக்கள் எவரும் வெளியில் வராத வண்ணம் தடுத்தால் தான் கரோனா நோயைத் தடுக்க முடியும். எனவே தமிழகத்திலும் முழுமையான ஊரடங்கைச் செயல்படுத்த வேண்டும். 144 தடை சட்டத்தினால் ஓரளவு மட்டும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது நோய் பரவலைத்  தடுக்க உதவாது" எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.