Advertisment

அன்புமணியுடன் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!

PMK key executives meet Anbumani suddenly

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. (நிறுவன) தலைவர் ராமதாஸ் கடந்த 10ஆம் தேதி (10.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பா.ம.க. செயல் தலைவராக செயல்படுவார். 2026ஆம் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு” எனப் பேசியிருந்தார்.

Advertisment

ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பா.ம.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ராமதாஸின் இந்த முடிவுக்கு அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டியிருந்த பதிவில், ‘பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ராமதாஸ் எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம்’ என தெரிவித்திருந்தார்.

Advertisment

மற்றொரு புறம் பா.ம.க.வின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை தொடர்ந்து சந்தித்து சமாதானம் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியிலேயே நீடிக்கிறது. அதே சமயம் “நானே பா.ம.க தலைவராக செயல்படுவேன்” என பா.ம.க. (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணியும் அறிவித்திருந்தார். இத்தகைய பரபரப்பான் சூழலில் தான் திலக பாமாவை நோய் கிருமி என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் விமர்சித்து காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அன்புமணி வீட்டில் அவரை அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான வடிவேல் ராவணன் மற்றும் திலக பாமா ஆகியோர் திடீரென சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பா.ம.க. அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் வரும் மே 11ஆம் தேதி (11.05.2025) செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் பா.ம.க. சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான கால்கோள் விழா நாளை (16.04.2025) நடைபெற உள்ளது. இதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

anbumani ramadoss pmk Ramadoss vadivel ravanan Thilagabama
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe