pmk

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் கோபால் தெருவை சேர்ந்தவர் 38 வயதான சவுந்தர் என்கிற சவுந்தரராஜன். குடியாத்தம் பா.ம.க. நகர செயலாளராகவுள்ளார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இன்று (23.07.2018) மதியம் 12 மணியளவில் தனது பைனான்ஸ்க்கு நடந்து சென்றார்.

Advertisment

அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கூலிப்படை கும்பல், நடந்துவந்த பா.ம.க. நிர்வாகி சவுந்தரராஜனை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். தலை, முகம், கையில் பலத்த வெட்டு விழுந்தது. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தலைதெறிக்க ஓடிய அவரை கூலிப்படை கும்பல் விடாமல் ஓட ஓட துரத்தி வெட்டியது.

Advertisment

ஒரு கட்டத்தில் கூலிப்படையினரிடம் இருந்து தப்பித்த சவுந்தரராஜன், ஒரு வீட்டிற்க்குள் ஓடிச்சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். கூலிப்படை கொலைவெறியுடன் கதவை உடைக்க முயன்றது. இதனை அதிர்ச்சியுடன் பார்த்த பொதுமக்கள் திரண்டு தட்டிக்கேட்டனர். கேட்ட பொதுமக்களை அரிவாளை காட்டி கூலிப்படை அச்சுறுத்தியது.

தகவலறிந்ததும், குடியாத்தம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் கூலிப்படை தப்பிவிட்டது. இதையடுத்து வீட்டுக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சவுந்தரராஜனை போலீசார் மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படை கும்பலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisment

வெட்டியவர்கள் சிக்கினால் தான் எதற்காக வெட்டினார்கள் என்கிற விவரம் தெரியவரும் என்கின்றனர் போலிஸார்.