
கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், அங்கு இறுதி கட்டத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இன்று பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம், பல்லாரி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜகவுக்காக வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இன்று திரையரங்கிற்கு வந்துள்ள தி கேரளா ஸ்டோர் படம் குறித்து பேசி அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பிரச்சார கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது; “தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. இது பயங்கரவாதத்தின் அசிங்கமான உண்மையைக் காட்டுகிறது மற்றும் பயங்கரவாதிகளின் வடிவமைப்பை அம்பலப்படுத்துகிறது. தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தும், தீவிரவாதத்துடனும் நிற்கிறது. காங்கிரஸ் கட்சி ஓட்டு வங்கிக்காக பயங்கரவாதத்தை பாதுகாத்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கிக்காக தீவிரவாதத்திற்கு அடிபணிவதை கண்டு வியப்படைகிறேன். அப்படிப்பட்ட கட்சியால் கர்நாடகத்தை காப்பாற்ற முடியுமா? பயங்கரவாத சூழலில், இங்குள்ள தொழில், தகவல் தொழில்நுட்பத் துறை, விவசாயம் மற்றும் புகழ்பெற்ற கலாச்சாரம் ஆகியவை அழிக்கப்படும்.
கர்நாடகா மாநிலத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கு ஆகிய மிகவும் முக்கியமானது. பயங்கரவாதத்தில் இருந்து கர்நாடகம் விடுபடுவதும் முக்கியம். பாஜக எப்போதும் தீவிரவாதத்திற்கு எதிரானது. ஆனால், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்போதெல்லாம் காங்கிரஸுக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. ” என்று பேசியுள்ளார்.