
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. மேலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.
அதே வேளையில், மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்க பாஜக படுதீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் எங்கெங்கு போட்டியிடலாம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வருகிறதாம். இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரு இடங்களில் போட்டியிட்டு வாரணாசியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும், அதில் ஒரு தொகுதி உ.பி மாநிலம் வாரணாசி என்றும், மற்றொரு தொகுதி தமிழகத்தின் ராமநாதபுரமாக இருக்கக்கூடும் என்றும் பாஜக வட்டாரத்தில் இருந்து தெரியவந்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கூட்டணி காட்சிகளாக இருந்து வரும் அதிமுக மற்றும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் சமீபகாலமாக அவர்களின் கூட்டணி முறியும் வகையில் பேசி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 25 தொகுதிகளைக் கைப்பற்றும்.” எனத் தெரிவித்திருந்தார். இதனிடையே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
அதேவேளையில், தமிழகத்தில் பாஜகவை வலுவாகக் காலூன்ற வைக்க ஏகப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், பாஜகவின் தேசிய முகமாக உள்ள பிரதமர் மோடியை தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வைத்தால், கூடுதல் கவனம் பெறுவதோடு, பாஜக காலூன்ற ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.