Advertisment

இல்லத்தரசிகள் தங்களது கோபத்தை வாக்குச் சீட்டில் வெளிப்படுத்துவார்கள்! - கி.வீரமணி

dddd

Advertisment

‘கரோனா தொற்று - கோவிட் 19 ஏற்படுத்திய வேலை கிட்டாத தன்மை, வறுமை, கடன் தொல்லை இவற்றிலிருந்து ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் இன்னமும் மீள முடியாத நிலை தொடர்கிறது.

விவசாயிகளின் வேதனையோ - இயற்கையின் ஒத்துழைப்பின்மையால், கதிர்முற்றி விளைந்த நெல்லைக்கூட அறுவடை செய்து, வருமானம் பெற முடியாத அளவுக்கு வயலில் பெய்த அதீத மழை காரணமாக பயிர்கள் மூழ்கி அழுகிய நிலை; ஏற்கெனவே அறுவடை செய்த நெல்லை மூட்டைகளாக மட்டுமே வைத்து விற்க முடியாத அளவுக்கு காவிரி டெல்டா பகுதியில் கடும் மழை ஈரத்தால் பாதிக்கப்பட்டு, பணம் பார்க்க முடியாத பரிதாப நிலை!

மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறை!

இந்நிலையில், விலைவாசி ஏற்றம் நம் நாட்டுத் தாய்மார்களையும், எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பையும் முறிப்பதாகவே நாளும் அவர்கள் மீது அடிமேல் அடியாக மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் விழுந்த வண்ணமே உள்ளது!

Advertisment

பெட்ரோல், டீசல் விலை தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் வான்முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதுவும் இந்த ஒரு வாரத்தில் சுமார் ரூ.100 ரூபாயை நெருங்கி விட்டது; டீசல் விலையும் இதுபோல ரூ.84.16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏதோ காரோட்டிகளைத்தானே பாதிக்கும் என்று மேலெழுந்தவாரியாகக் கருதக்கூடாது! விவசாயிகளையும், விவசாயப் பொருள்களை ஏற்றி விற்பனைக் கூடங்களுக்கு எடுத்துச் செல்லும் பயணச் செலவுடன் இணைந்து, காய்கறிகள் விலை உள்பட அத்தியாவசிய பண்டங்களின் விலை ஏற்றத்தினை விரைவுபடுத்துகின்ற விளைவாகிவிடும்.

எடுத்துக்காட்டு, சிறிய வெங்காயம் 1 கிலோ (திண்டுக்கல் மார்க்கெட் போன்றவற்றில்) 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. இல்லத்தரசிகளின் கண்களில் வெங்காயத்தை உரிக்காமலே கண்ணீர் பீறிடும் கொடுமை!

காஸ் சிலிண்டர்களின் விலை ஒரு வாரத்திலேயே 2 முறை உயர்ந்து ரூ.75 கூடுதலாகி, ரூ.785 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் காஸ் சிலிண்டர் விலை ரூ.569 ஆக இருந்தது - இப்படி திடீரென்று ஏற்றப்பட்டுவிட்டது!

குடும்பங்களில் மட்டுமா கேஸ் - எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன?

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வையொட்டி, வணிக சிலிண்டரும் விலை உயரக்கூடிய வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலை; இதனால் உணவகங்கள், தேநீர்க் கடைக்காரர்கள், சாலையோர உணவு தயாரிப்பாளர்கள், உணவகம் நடத்துவோர் சஞ்சலத்தில் உள்ளனர்.

அதன் விளைவு இறுதியில் நுகர்வோர், பயனாளிகள் தலையில்தானே வந்து விடியும்? ஏன் இந்த எரிவாயு விலை ஏற்றம்? பெட்ரோல் - டீசல் விலையேற்றம் எதனால்?

வன்மையான கண்டனத்திற்குரியது!

பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு - ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே சில்லறை விற்பனையில் பெட்ரோலுக்கு 61 சதவிகித வரியும், டீசலுக்கு 56 சதவிகித வரியும் விதித்துதான் வசூலித்து வருகின்றன. இதன் காரணமாக சமையல் எரிவாயு - கேஸ் - சிலிண்டர் மாத்திரமல்லாமல், பெட்ரோல் - டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

இன்னொரு தகவல், சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவுசெய்து, அன்றைய நிலவரப்படி ஆன்லைனில் வாடிக்கையாளர் பணத்தைச் செலுத்திவிட்டாலும், சிலிண்டர் டெலிவரி செய்யும் நாளன்று விலை உயர்ந்தால், அந்தக் கூடுதல் தொகையை நிலுவைத் தொகையாக குறிப்பிட்ட எண்ணெய் நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன!

நடுத்தர மக்களைக் கசக்கிப் பிழிந்தெடுக்கலாமா?

இது பொதுவான விற்பனை - வாங்கல் நெறிமுறைக்கே விரோதமானது. ஒப்பந்தம் மாதிரி பணத்தை நிர்ணயம் செய்த பிறகு, அந்த விலைக்குத்தானே கொடுப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது என்ற தார்மீக நெறி இதில் மீறப்படவில்லையா?

மத்திய - மாநில அரசுகள் ஒருபுறம், எண்ணெய் கம்பெனிகள் மறுபுறம் இப்படி எளிய, நடுத்தர மக்களைக்கசக்கிப் பிழிந்தெடுக்கலாமா?

இல்லத்தரசிகளே இதுதான் வளர்ச்சி! வளர்ச்சி! தேர்தலுக்குமுன் உங்களுக்கு இந்தப் ‘‘பரிசு!’’ நியாயந்தானா? வருகின்ற தேர்தலில் இல்லத்தரசிகள் தங்களுடைய கோபத்தை வாக்குச் சீட்டில் வெளிப்படுத்துவர்.

இந்த விலை ஏற்றத்தை உடனடியாக மத்திய அரசு குறைத்தாக வேண்டும்’ என தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் கி.வீரமணி.

diesel petrol price hike
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe