Advertisment

எடப்பாடி பழனிசாமியால் மட்டுமல்ல... எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது... மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ddd

Advertisment

திராவிட முன்னேற்றக் கழகத்தின் “கிராம சபை” கூட்டங்கள் இனி “மக்கள் கிராம சபைக் கூட்டம்” என்ற பெயரில் நடத்தப்படும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் 1700 நிர்வாகிகள் - 16500 கிராமங்கள்/வார்டுகளை நோக்கி - மக்கள் சந்திப்பும் பிரச்சாரமும் தொடரும். அதை இந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் மட்டுமல்ல- எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்” என்ற கிராமசபைக் கூட்டங்களில் மிகப்பெரிய அளவில் இளைஞர்களும், தாய்மார்களும் - அனைத்துத் தரப்பு மக்களும் கூடுவதைப் பார்த்து முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி அதிர்ச்சியில் மூழ்கி - அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி “கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக் கூடாது; மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஒரு செய்திக்குறிப்பை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் - பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருக்கிறார். ஜனநாயக விரோத உத்தரவு மூலமாக - தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கும் முதலமைச்சருக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களில் அமைக்கப்படும் “கிராமசபை” வேறு! திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கிராம சபைக் கூட்டம் வேறு என்பதைக் கூட இந்த உத்தரவின் பின்னணியில் ஒளிந்து கொண்டிருக்கும் முதலமைச்சரும் உணரவில்லை. உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியும் அறியவில்லை.

Advertisment

தி.மு.க. நடத்தும் “கிராமசபை”க் கூட்டத்திற்கு ஊராட்சிகளின் ஆய்வாளராக இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடவில்லை. ஏன் ஊராட்சி தலைவர்களும் அழைப்பு விடவில்லை. இக்கூட்டத்தின் “நிகழ்ச்சிக் குறிப்பு” அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை. ஏன் இக்கூட்டத்தில் எந்த அரசு அதிகாரியும் வந்து பங்கேற்க வேண்டியதில்லை. இது முழுக்க முழுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் “கிராமசபை”க் கூட்டம். இது அ.தி.மு.க அரசின் தோல்விகளை - அரசு கஜானாவில் அமைச்சர்கள் அடித்த கொள்ளைகளை - மாநில உரிமைகளை அடகு வைத்த முதலமைச்சரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பிரச்சாரக் கூட்டம். இது தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் பிரச்சாரக் கூட்டம்! ஆனால் “கிராமசபை”க் கூட்டம் துவங்கிய இரு தினங்களிலேயே திரு எடப்பாடி பழனிசாமிக்குக் காய்ச்சல் வந்து விட்டது. கூட்டத்தைப் பார்த்து பதற்றம் அதிகரித்து விட்டது. எந்தப் பக்கம் போனாலும் - மாநிலம் முழுவதும் அவருக்கு வீசும் எதிர்ப்பு அலைகள் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.

எனவேதான், அரசியல் சட்டம் வகுத்துத் தந்த “கிராம சபையின்” கூட்டத்தைக் கூட நடத்த ஊராட்சிகளை அனுமதிக்காமல் - கட்சிக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும் - அமைச்சர்களும் “சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும்” என்று கற்பனை செய்து கொண்டு- தி.மு.க.வின் கிராமசபைக் கூட்டத்தைத் தடுக்கிறார்கள்.

அ.தி.மு.க.விற்கு தைரியமிருந்தால் - போட்டிக் கூட்டம் நடத்தி “நாங்கள் இவ்வளவு சாதித்துள்ளோம்” என்று சாதனையைச் சொல்லலாம். ஆனால் முதலமைச்சரும் - அதிமுக அமைச்சர்களும் தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ள வேதனையால்- இன்றைக்கு எந்த கிராமத்திற்குள்ளும் தேர்தல் நேரத்தில் நம்மால் நுழைய முடியாது என்ற முடிவிற்கு வந்து இது போன்ற தடைகளை விதிக்கிறார்கள்.

“கிராமசபை என்பது அரசியல் சட்டத்தால் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பு. அந்தப் பெயரில் அரசியல் கட்சிகள் நடத்தக்கூடாது” என்ற செய்திக் குறிப்பின் கூற்று ஏன் “முதலமைச்சர்” பதவிக்கும் “அமைச்சர்” பதவிக்கும் பொருந்தாது? ஏனென்றால், இந்த இரண்டு பதவிகளுமே அரசியல் சட்டத்தில் உள்ளவைதான்! இந்த செய்திக்குறிப்பின்படி திரு. பழனிசாமியும்- மற்ற சகாக்களும் “முதலமைச்சர்” என்ற பெயரையும் - “அமைச்சர்” என்ற பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்று செய்தித்துறை ஒரு பத்திரிக்கை குறிப்பை வெளியிட வேண்டியதுதானே! இந்தப் பெயர்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே? ஆகவே அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் இரு தினங்களில் சுனாமி போல் கிளம்பியுள்ள எதிர்ப்பு அலை முதலமைச்சர் திரு. பழனிசாமியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி - அராஜக மனப்பான்மையுடன் தி.மு.க. “கிராமசபை” கூட்டத்தைத் தடுக்க முயன்றுள்ளார். இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிராமசபைக் கூட்டத்தை எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசால் தடுத்து விட முடியாது. பிரச்சாரத்தையும் “வழக்குகளை”க் காட்டி முடக்கி விட முடியாது. அதே நேரத்தில் –“அமைதியான தேர்தலுக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று சென்னையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையில்- திராவிட முன்னேற்றக் கழகத்தின் “கிராம சபை” கூட்டங்கள் இனி “மக்கள் கிராம சபைக் கூட்டம்” என்ற பெயரில் நடத்தப்படும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் 1700 நிர்வாகிகள் - 16500 கிராமங்கள்/வார்டுகளை நோக்கி - மக்கள் சந்திப்பும் பிரச்சாரமும் தொடரும். அதை இந்த முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமியால் மட்டுமல்ல- எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

makkal grama sabha mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe