
தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளத்தில் உள்ள எட்வர்ட் நடுநிலைப்பள்ளியில் இருக்கும் 21வது வார்டில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து பத்திரிகையாளரிடம் பேசிய ஓ.பி.எஸ்., “ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் தான் தமிழக அரசின் சிறந்த திட்டங்கள். திமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலத்தில் மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் ஜெயலலிதா காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள். இதிலிருந்து எந்த ஆட்சி சிறப்பான ஆட்சி என்று மக்கள் மனதில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. திமுக தேர்தல் காலத்தில் அறிவித்த திட்டங்களுக்கு திமுகவினரை மூக்கணாங்கயிறு போடுவதுபோல் தடுத்து நிறுத்துகின்றனர். இதிலிருந்து அதிமுகவிற்கு மக்கள் மகத்தான வெற்றி பெற்று தருவார்கள்” என்று கூறினார்.