ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை, டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை மேலும் ஒரு நாள் நாளை வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார். ஏற்கனவே சிபிஐ காவலை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தனர்.
அதில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர்- 5 ஆம் தேதி வரை நீட்டித்தும், ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்கக்கூடாது என உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சிதம்பரத்தை பார்த்து செய்தியாளர்கள், சார் நீங்க எதாவது சொல்ல விரும்புறீங்களா என்று கேட்டனர். அதற்கு சிதம்பரம் 5% என்று கை காட்டினார். உடனே செய்தியாளர் என்ன சார் 5% ஜிடிபி பத்தி சொல்றிங்களா என்றார். அதற்கு சிதம்பரம் 5% என்றால் உங்களுக்கு நினைவில் வரவில்லையா என்று கேட்டார். உடனே அங்க இருந்த செய்தியாளர்கள் ஜிடிபி பற்றி சொல்கிறார் என்று பேசிட்டு இருந்தனர். இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் செல்வதால் சிதம்பரம் செய்தியாளர்களிடம் இப்படி கூறியிருப்பது பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.