Pattukottai Independent candidate passes away by Corona

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் தோல்விக்கு அந்தந்தப் பகுதி சுயேச்சை வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளும் ஒரு பிரதான காரணமாக இருந்தது.

Advertisment

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் 20 வருடங்களுக்குப் பிறகு திமுக வேட்பாளர் அண்ணாத்துரையும், அதிமுக கூட்டணியில் தமாகா வேட்பாளர் ரெங்கராஜனும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து சமூக நலக்கூட்டணி என்ற பெயரில் முத்தரையர் சங்கங்கள் சார்பில் பாலகிருஷ்ணன் சுயேச்சையாக போட்டியிட்டார்.

Advertisment

பிரச்சாரக் காலத்திலேயே அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அவருக்கு கூட்டம்கூடியது. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டபோது திமுக வேட்பாளர் அண்ணாத்துரை, தமாகா வேட்பாளர் ரெங்கராஜனைவிட 25,269 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அதே இடத்தில் சுயேச்சை வேட்பாளர் 23,771 வாக்குகள் பெற்றிருந்தது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

தேர்தல் முடிவு வெளியான நிலையில், அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை ஏற்பட்டபோது, சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டில் 70% பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (09.05.2021) காலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல ஊர்களிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாலகிருஷ்ணன் தேர்தலுக்கு முதல் நாள் வெளியிட்டிருந்த வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. அந்த வீடியோவில் "நான் வெற்றிபெறாவிட்டால் உயிரோடு இருக்க மாட்டேன்"என்று பேசி கண்களைக் கசக்குவது போன்ற அந்தக் காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.