தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் கருத்து பேதம் எனத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன விவகாரம் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அண்மையில் கூட்டியிருந்தார். அப்போது இந்த விசயத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தி.மு.க.வின் ஆதரவு உண்டு எனத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தார். இதுதான் காங்கிரஸுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், சீன விவகாரத்தில் மோடி அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனத்தை வைத்துவரும் நிலையில், தி.மு.க. இந்த விசயத்தில் மோடி அரசுக்கு ஆதரவு தெரிவித்ததை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இது தொடர்பாக சோனியா அனுப்பிய தூதர் ஒருவர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். உங்கள் கட்சியின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரில்தான், நீங்கள் சீன விவகாரத்தில் மோடி அரசின் நடவடிக்கைகளை ஆதரித்தாகக் காங்கிரஸ் கருதுகிறது என்று சொல்லியிருக்கிறார்.
உடனே, ஸ்டாலின், தி.மு.க. திராவிடநாடு கேட்ட காலத்திலேயே, சீன யுத்தத்தின் போது இந்திய அரசை முழுமையாக ஆதரித்தது. இந்தியாவிற்குள் தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு வேறு. வெளியுறவு விவகாரங்களில் மத்திய அரசின் முடிவையே அது ஆதரிக்கும். இப்போதுகூட இந்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதோடு, உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு தி.மு.க. தனது வணக்கத்தைச் செலுத்துதுகிறது எனச்சொல்லியிருக்கார்.
பிரசாந்த் கிஷோரைக் காங்கிரஸ் குறிவைக்க என்ன காரணம் எனவிசாரித்தபோது, அவர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக சீட் தரத் தேவையில்லை என்றும், அந்தக் கட்சி எக்ஸ்ட்ரா லக்கேஜு என்றும் தி.மு.க.வுக்கு பரிந்துரைத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செய்திதான் டெல்லிவரை சென்றது எனச் சொல்கிறார்கள் கதர் சட்டையினர்.