Skip to main content

அந்தக் கட்சி எக்ஸ்ட்ரா லக்கேஜ்... கூட்டணிக்குள் கருத்து பேதம்... 

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

modi-stalin-sonia-prashant kishor

 

தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் கருத்து பேதம் எனத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சீன விவகாரம் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அண்மையில் கூட்டியிருந்தார். அப்போது இந்த விசயத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தி.மு.க.வின் ஆதரவு உண்டு எனத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தார். இதுதான் காங்கிரஸுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், சீன விவகாரத்தில் மோடி அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனத்தை வைத்துவரும் நிலையில், தி.மு.க. இந்த விசயத்தில் மோடி அரசுக்கு ஆதரவு தெரிவித்ததை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள். 

 

இது தொடர்பாக சோனியா அனுப்பிய தூதர் ஒருவர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். உங்கள் கட்சியின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரில்தான், நீங்கள் சீன விவகாரத்தில் மோடி அரசின் நடவடிக்கைகளை ஆதரித்தாகக் காங்கிரஸ் கருதுகிறது என்று சொல்லியிருக்கிறார்.

 

உடனே, ஸ்டாலின், தி.மு.க. திராவிடநாடு கேட்ட காலத்திலேயே, சீன யுத்தத்தின் போது இந்திய அரசை முழுமையாக ஆதரித்தது. இந்தியாவிற்குள் தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு வேறு. வெளியுறவு விவகாரங்களில் மத்திய அரசின் முடிவையே அது ஆதரிக்கும். இப்போதுகூட இந்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதோடு, உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு தி.மு.க. தனது வணக்கத்தைச் செலுத்துதுகிறது எனச் சொல்லியிருக்கார்.

 

பிரசாந்த் கிஷோரைக் காங்கிரஸ் குறிவைக்க என்ன காரணம் என விசாரித்தபோது, அவர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக சீட் தரத் தேவையில்லை என்றும், அந்தக் கட்சி எக்ஸ்ட்ரா லக்கேஜு என்றும் தி.மு.க.வுக்கு பரிந்துரைத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செய்திதான் டெல்லிவரை சென்றது எனச் சொல்கிறார்கள் கதர் சட்டையினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' - திமுக தலைவர் ஸ்டாலின்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The impossibility situation really saddens me too'-DMK President Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் 'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது.  தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.