delhi

இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் 800 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றத்திற்குள் வருகிற போது அவர்களது பி.ஏ.க்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என ஒரு பெரும் படையே நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழையும். இது காலம் காலமாக நடந்து வருவதுதான்.

Advertisment

Advertisment

தற்போது கரோனா தொற்று டெல்லியிலும் கடுமையாக அதிகரித்து வருவதால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், மத்திய அமைச்சர்கள், துறைகளின் உயரதிகாரிகள், எம்.பி.க்கள் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் வந்து செல்ல கடுமையான கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் எம்.பி.க்களுடன் வரும் பி.ஏ. மற்றும் அலுவலகப் பணியாளர்களின் படை எடுப்பால் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது தவிர்க்கப்படுவதாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளது மத்திய சுகாதாரத்துறை. இதனைத் தொடர்ந்து, எம்.பி.க்களுடன் வரும் கூட்டத்திற்குக் கடிவாளம் போடும் வகையில், எம்.பி.க்களின் பி.ஏ.க்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்குமாறு தனது செக்ரட்டரியிடம் வலியுறுத்தியுள்ளார் ஓம்பிர்லா!

இதனையடுத்து, 'நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் எம்.பி.க்கள் யாரும் தங்களது பி.ஏ.க்களை அழைத்து வரக்கூடாது; நாடாளுமன்றத்துக்குள் நுழைய பி.ஏ.க்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது'என்கிற உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் லோக்சபா செக்ரட்டரி சினேகலதா ஸ்ரீவத்சவா.