Advertisment

மர்மம் விலகாத மாணவியின் மரணம்! சாலை மறியலில் பெற்றோர்! திருச்சியில் பரபரப்பு!

ddd

திருச்சி சமயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனலெட்சுமி இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரியின் மாணவிகள் விடுதியில் ராஜேஸ்வரி என்ற மாணவி மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

அரியலூர் மாவட்டம் கருப்பூா், பொய்யூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி இரண்டாம் ஆண்டு இளங்களை பார்மா படிப்பை விடுதியில் தங்கி பயின்று வருகிறார். வழக்கம்போல பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்று வந்த மாணவி ராஜேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை (17.01.2021) மாலை விடுதிக்கு வந்துள்ளார்.

Advertisment

திங்கட்கிழமை செமஸ்டா் தோ்வு என்பதால் 18.01.2021 விடியற்காலை 1 மணி வரை சக தோழிகளுடன் அறையில் அமர்ந்து படித்து வந்துள்ளார். இரவு வெகு நேரம் படித்ததில் அவரோடு படித்து கொண்டிருந்த 7 தோழிகளும் அவா்களுடைய அறைக்கு சென்ற நிலையில், அதன்பிறகு ராஜேஸ்வரிக்கு என்ன நடந்தது என்று அவிழ்க்கப்படாத முடிச்சாக உள்ளது.

திங்கட்கிழமை விடிந்த பிறகு கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த ராஜேஸ்வரியின் தோழிகள் அவரை அறையில் வந்து தேடி பார்த்துவிட்டு சென்றுள்ளனா். காலை 8.45 மணிக்கு விடுதி கட்டிடத்தின் தரை தளத்தில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த விடுதி மாணவிகள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

அவா்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் முன்பு அவரை எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரிக்கு தூக்கி சென்றுள்ளனா். ஆனால் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் கிடைத்த நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் காவல்துறையினா் பெண்ணின் உடலை நிர்வாகத்திடம் இருந்து கைப்பற்றி திருச்சி ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி ராஜெஸ்வரி இறந்து கிடந்த பகுதியை கல்லூரி நிர்வாகம் கழுவி விட்டிருந்த நிலையில், எந்தவித தடயமும் கிடைக்காமல் காவல்துறை ஒருபக்கம் திணறி வருகிறது.

மற்றொரு பக்கம் கல்லூரி நிர்வாகம் தன்னுடைய பெண்ணை கொன்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ள நிலையில், ராஜேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினா்கள், பெண்ணின் உடற்கூறு பரிசோதனையை தலைமை மருத்துவமனையில் வைத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கல்லூரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கல்லூரி நிர்வாகம் முன்பு மறியல் போராட்டத்தில் உறவினா்கள் ஈடுபட்டனா்.கல்லூரி நிர்வாகம் ராஜேஸ்வரி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவலை கொடுத்திருந்த நிலையில் பெண்ணின் உடம்பில் எந்தவித எலும்பு முறிவுகளும் ஏற்படாமல் கழுத்து நெறிக்கப்பட்டு, தாடை பகுதியிலும், தொடைப்பகுதியிலும் சில இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், பெரிய சந்தேகத்தை காவல்துறைக்கு ஏற்படுத்தி உள்ளது.

எனவே மாணவியின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்ற கோணத்தில் காவல்துறையும் தன்னுடைய விசாரணையை துவங்கியுள்ளது.இரவு 1 மணிக்கு பிறகு என்ன நடந்தது என்பதற்கான எந்தவித சிறிய தடயமும் கிடைக்காததால் விசாரணையில் சற்று தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு காரணம் பெண்கள் விடுதி என்பதால் கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம்.

மாணவி தரப்பினர் கூறும்போது, மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று நிர்வாகத்தரப்பில் சொல்வது முரண்பாடான கருத்தாக உள்ளது. எனவே விரைவில் மா்ம முடிச்சுகள் விலகும், காவல்துறை இந்த வழக்கை புதிய கோணத்தில் கையாண்டு குற்றவாளிகளை பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, முதல் சந்தேகம் கல்லூரி நிர்வாகம் எந்தவித தகவலும் காவல்துறைக்கு தெரிவிக்காமல் அவா்களே மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனா்.

இரண்டாவது கல்லூரி நிர்வாகம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவா் விழும்போது சுவரை ஒட்டியே விழுந்ததாகவும் கொடுத்த தகவலிலும் ஒரு முரண்பாடு உள்ளது. பொதுவாக மேலிருந்து கீழே குதிக்கும்போது கட்டிடத்தில் இருந்து சில அடி தூரம் தள்ளி விழுவார்கள் ஆனால் நிர்வாகம் சுவரை ஒட்டியே விழுந்ததாக கூறுகின்றனா்.

அதேபோல் மேலிருந்து கீழே வந்து விழும் வேகத்தில் உடம்பில் ஏதாவது ஒரு பகுதியாவது முன் மண்டை பகுதி அல்லது பின் மண்டை பகுதி அடிபடும், ஆனால் இந்த பெண்ணில் தலையில் சிறிய காயம் கூட இல்லை. எனவே இது ஒரு சந்தேகம் ஏற்படுகிறது.எனவே எதுவாக இருந்தாலும் முழுமையான உடற்கூறு ஆய்வு தகவல் அறிக்கை வந்த பிறகு உரிய விசாரணை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பெண்ணின் உறவினா்கள் கல்லூரியினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம், டிஐஜி ஆனி விஜயா இருவரும் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து வைத்தனர். மருத்துவ அறிக்கை வந்த உடன் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றம் இருப்பின் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றும், எனவே இந்த மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையிலான ஒரு தனிப்படை அமைத்திருக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று மாணவியின் பெற்றோரிடம் உறுதியளித்ததாக கூறினார்கள்.

college student incident Tiruchirappalli
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe