ADVERTISEMENT

“ஓபிஎஸ் உங்களிடம் சில விஷயங்களை தெரிவிக்க சொன்னார்” - பண்ருட்டி ராமச்சந்திரன்

09:49 PM Mar 02, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அவரது சார்பாக அவரது கருத்தினை தெரிவிக்க சொன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களான ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “ஓபிஎஸ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து தனது உணர்வுகளை தெரிவித்தார். அவர் சொன்னதை உங்களிடமும் தெரிவிக்க கேட்டுக் கொண்டார். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த இடைத்தேர்தல் முடிவு எங்களை பொறுத்தவரை பேரதிர்ச்சியையும் மன வேதனையையும் அளித்துள்ளது. ஈரோடு எங்கள் கோட்டை என தம்பட்டம் அடித்தவர்களுக்கு, தேர்தலை அவர்களே முன்னின்று நடத்தட்டும் என ஒத்துழைப்பு தந்தோம். அப்படி இருந்தும் இந்த முடிவு பேரதிர்ச்சியை தருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இந்த இயக்கத்தை வளர்த்தனர். வலுவோடு இருந்த கட்சி இன்று இத்தகைய நிலைக்கு ஆளாகியுள்ளது என்பதை நினைக்கும் போது மன வேதனை ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம் யார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஒத்துப்போக வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆரம்பம் முதல் ஒத்துழைப்பை தந்து கழகத்தை வலுப்படுத்த நினைக்கிறார். அதற்கு நேர்மாறாக இபிஎஸ் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் ஒற்றுமைக்கு உலை வைத்தார்கள். பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க முனைந்தார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் ஓபிஎஸ் மற்றும் கழகத்தின் முன்னோடிகளை உதாசீனப்படுத்தினார்கள். இந்த கட்சி வீணாகி விடக்கூடாது என நினைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடும் என கூறினார்கள். அதை நாங்கள் முழு மனதுடன் ஏற்றோம். அந்த தீர்ப்பின் படியும் எடப்பாடி தரப்பினர் நடந்து கொள்ளவில்லை. பொதுக்குழு வேட்பாளர்களின் பட்டியலை பெற்று ஒருவரை அனுப்ப வேண்டும். அதற்கு நேர்மாறாக வாக்கெடுப்பு போல் நடத்தி அவர்களே ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்தார்கள். அதற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

நாங்கள் எதிர்பார்த்தது போல் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. நாங்களும் பிரச்சாரம் மேற்கொள்கிறோம் எனக் கூறினோம். அவர்கள் ஒருங்கிணைப்பாளர்களையோ அவர்களை சேர்ந்தவர்களையோ அனுமதிக்கவில்லை. மரியாதைக்கு கூட கூப்பிடவில்லை. இயக்கத் தொண்டர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தவில்லை. இருந்தாலும் எங்களால் ஆன ஒத்துழைப்பை இந்த இடைத்தேர்தலில் தந்தோம். ஆனால் எங்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் இரட்டை இலை சின்னத்துடன் டெபாசிட்டாவது பெற முடிந்தது. இவ்வளவுக்கும் காரணம் எடப்பாடி பழனிசாமியும் அவர்களை சேர்ந்தவர்களும் தான். அவர்களின் ஆணவப்போக்கு; யாரையும் அரவணைத்து செல்லாத நிலை; இதன் காரணமாக தான் கழகம் இப்படி உள்ளது. பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று அவரை முன்னிறுத்தினார்களோ தொடர்ந்து தோல்விகள் தான் ஏற்பட்டது. அனைத்து தேர்தல்களிலும் தோல்வி. இன்று கட்சியையும் இழந்து விடுவோமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT