Panruti Ramachandran addressed press

Advertisment

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி, ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் இன்று ஓ.பி.எஸ். அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “ஒருங்கிணைப்பாளரை நீக்கியது இயற்கை நீதிக்கு புறம்பானது.தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். கூறியது என்ன ஆனது. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என தீர்மானம் நிறைவேற்றினார்களே அது என்ன ஆனது. ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று கூறிய நிலையில், தற்போது புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்ய என்ன அவசியம் ஏற்பட்டது.

1980ல் எம்.ஜி.ஆருக்கு கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி கிடைத்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பண பலம், படை பலம், எங்கள் தரப்பு வேட்பாளர் வாபஸ், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பெயர் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள அனுமதி என அனைத்தும் இருந்தும் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே பொதுமக்கள் அளித்த தீர்ப்பு. இந்த மாயை எப்பொழுது விலகும் என்றால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் எங்கள் பக்கம் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

Advertisment

ஆகவே இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்ட நாங்கள் மக்கள் மன்றத்திற்கு செல்லவிருக்கிறோம். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போதெல்லாம் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆகவே எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வதற்கு வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாடு நடத்தப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள், கட்சி துவங்கி 51வது வருடம் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக அந்த மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கிறோம். அதன் பிறகு மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.