Skip to main content

“வேங்கைவயல் முதல் கள்ளச்சாராயம் வரை” - லிஸ்ட்போட்ட இ.பி.எஸ் 

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

Palaniswami Das Complaint With Governor Rn Ravi About Tamil Nadu Govt

 

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.  இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சைதாப்பேட்டை சின்ன மலையிலிருந்து பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். 

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “  திமுக அரசின் 2 ஆண்டுக்கால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. நாங்கள் அளித்துள்ள புகார் மனுக்களை ஆளுநர் பரிசீலிப்பதாகக் கூறியிருந்தார். மணல் கடத்தலைத் தடுத்த வி.ஏ.ஓ.வை அலுவலகத்தில் புகுந்து கொலை செய்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து சேலத்தில் ஒரு வி.ஏஓ.வை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆக இப்படி நேர்மையாகச் செயல்படும் அரசு ஊழியர்களுக்குக் கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு கிடையாது. 

 

விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதையடுத்து தஞ்சாவூரில் மது அருந்தி இருவர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து 20 பேருக்கும் மேல் உயிரிழந்த போதே இந்த அரசங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் தஞ்சையில் நேற்று இரண்டு உயிர்கள் பலியாயிருக்காது. ஆனால் அந்த மாவட்ட நிர்வாகம், இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இருவரும் பாரில் மது குடித்துவிட்டு வெளியே வந்த பிறகுதான் உயிரிழந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது மாவட்ட நிர்வாகம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  போலி மதுபானம் குடித்து உயிரிழந்தார்கள் என்ற செய்தி வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அரசு அதிகாரிகளை வைத்து அரசு இது போன்று முயற்சி செய்கிறது. வேங்கை வயல் சம்பவத்தில் கூட இன்னும் முழு நடவடிக்கை இல்லை. இப்படித் தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு என அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளுக்கு காவல்துறையைப் பார்த்து பயம் கிடையாது. எதாவது நடவடிக்கை எடுத்தால்தானே பயம் இருக்கும். 

 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று டிஜிபியும், சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று முதல்வரும் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் 2020 ஆம் ஆண்டில் 31 பாலியல் வன்கொடுமையும், 2021 ஆம் ஆண்டு  32 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த தகவல் எல்லாம் அவர்கள் அளித்த மானிய கோரிக்கை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த புத்தகத்தில் மதுவிலக்கு அமலாக்கத்துறையின் சிறப்பான நடவடிக்கைகளால் கடந்த 13 வருடங்களாகக் கள்ளச்சாராய இறப்பு மாநிலத்தில் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து எங்களது ஆட்சியில் எந்த உயிரிழப்பு இல்லை என்று தெரிகிறது. ஆனால் திமுக அமைச்சர் வேண்டுமென்றே எங்கள் ஆட்சியின் மீது குறைசொல்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்