
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி இன்று (13.05.2025) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நன்பகல் 12.30 மணியளவில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்கள் வாசிக்கப்பட்டது. அதில், “9 குற்றவாளிகளும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த வா.புகழேந்தி பல கேள்விகளை எழுப்பினார். அதில், ''பொள்ளாச்சியில் கொடுமையான இந்த பாலியல் சம்பவம் நடைபெற்ற பொழுது இந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர், முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி . உள்துறை அமைச்சராகவும் இருந்தார். அப்பொழுதுதான் இந்த சம்பவம் நடைபெற்று. சபரிராஜன் என்கின்ற ரிஷ்வந்த், திருநாவுக்கரசு, மணிவண்ணன், அருண்குமார், ஹெரன் பால் என்கிற ஐந்து பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டார்கள்.ஆனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னர் மேலும் 4 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பாபு, அருண்குமார், சதீஷ் மற்றும் அதிமுகவை சார்ந்த அருளானந்தம் ஆவார்கள். இதில் அதிமுகவை சேர்ந்த நபர் குற்றவாளிகளுடன் முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் புகைப்படத்தில் உள்ளார் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் அவர்களுக்கு வேண்டியவர். பயங்கர எதிர்ப்புகளுக்கு இடையேதான் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

சிபிஐ வந்த பின்னர் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் மறைத்ததை கண்டுபிடித்து எல்லாவற்றையும் புதுப்பித்து அதை வழக்கு மன்றத்தில் சமர்ப்பித்து இப்போது சரித்திரம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கை ஆராய்ந்து அறிந்து இதுபோன்ற குற்றங்கள் பிற்காலத்தில் நடக்கக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்துடன் நீதிபதி நந்தினிதேவி இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார். சரித்திரம் படைத்த இந்த தீர்ப்பு பாராட்டுக்குரியது.
முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக அவர் மீது பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவருடைய சொந்த தொகுதியிலேயே இந்த பாலியல் வன்கொடுமை நடந்து, இப்பொழுது இப்படிப்பட்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது அவர் பதவியில் இருந்தார். அவருடைய புதல்வர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்த வழக்கில் பின்னர் சேர்க்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தொகுதிக்கு செல்லும் பொழுது பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டு மக்கள் அவரை வெளியே அனுப்பினார்கள். இது நடந்ததற்காக வெட்கப்பட வேண்டும்; தலைகுனிய வேண்டும்; அவமானப்பட வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு வரவேற்கிறேன் நாங்கள்தான் சிபிஐக்கு கொடுத்தோம் என்று சொன்னால் சிபிஐக்கு பல வழக்குகள் பல நேரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ரசீத் கொலை வழக்கு ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக இருந்த பொழுது கொடுக்கப்பட்டது. அதில் உள்துறை அமைச்சர் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அது சிபிஐ குறித்து ஜெயலலிதா கூறும்போது 'சிபிஐ என்ன வானத்திலிருந்து குதித்து வந்து விட்டதா?' என்று கேட்பார்கள். எதிர்ப்பை சமாளிக்க வேறு வழியில்லாமல் தான் பழனிசாமி இதை கொடுத்தார். ஏன் தமிழக போலீஸ் அதிகாரிகளை கொண்டு விசாரித்து இந்த தீர்ப்பை வழங்கி இருக்கலாமே. இப்பொழுது இப்படிப்பட்ட தீர்ப்பு வந்த பின்னர் அவர் தான் அன்றைய முதல்வராக உள்துறை அமைச்சராக இருந்ததற்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்து ராஜினாமா செய்ய வேண்டும். அவருடன் பொள்ளாச்சி ஜெயராமனும் ராஜினாமா செய்ய வேண்டும். அனுதினமும் மகளிர்காக அவர்கள் உரிமைக்காக பேசி வரும் பழனிசாமி இனி பேசுவதற்கு அருகதை அற்றவர் ஆகிவிடுகிறார். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னார் அவரது ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருந்தது என்பதை இன்றைய தீர்ப்பு காட்டிவிட்டது. இனி அதை பேச அவருக்கு தகுதி இல்லை. வழக்கை மிக திறமையாக நடத்திய சிபிஐ அதிகாரிகளுக்கும் அதன் வழக்கறிஞர் சுரேந்திர மோகன் அவர்களுக்கும் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடியில் அப்பா மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சிபிஐக்கு மாற்றி கொடுக்கவில்லையா? இது ஏதோ ஒரு புதிய ஆச்சரியமான செயலை செய்தது போல வரவேற்கிறோம் என்று அறிக்கை கொடுப்பது அவமானமான செயல். இனி இந்த தொகுதிக்குள் சென்று வாக்குகளை கேட்க முடியாது. கொங்கு மண்டலத்தில் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்கள். தேர்தல் நேரத்தில் இவர்கள் செய்ததை மக்கள் முன்னர் எடுத்துச் சென்று நானே பிரச்சாரம் செய்து சொல்லுவேன். இதேபோன்றுதான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மலேசியாவில் இருந்து வந்த ஒரு பெண்மணி தன்னை கெடுத்து விட்டதாக புகார் அளித்ததை நாடே பார்த்தது. அதையும் அண்ணா திமுக ஒரு பெரிய மனிதர் தான் செய்தார் என கைது செய்யப்பட்டார். இப்படித்தான் பழனிசாமி ஆட்சியில் நடந்தது. ஆகவே அடுத்தவர்களை குறை சொல்ல இவருக்கு அருகதை இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பாலியல் குற்றச்சாட்டை அடுத்து இதே பழனிசாமி இந்த அரசுக்கு முதல்வருக்கும் எதிராக எவ்வளவு எல்லாம் பழனிசாமி பேசினார். அப்பொழுது இந்த அரசு அந்த நபரை திமுக காரர் என்று ஒப்புக்கொண்டு பதவியில் இருந்து நீக்கியது. அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இப்பொழுது இதேபோன்று ஒப்புக்கொள்ள வேண்டும். உணர வேண்டும். மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இதை விட்டுவிட்டு வரவேற்பு என்பது ஏமாற்றி செய்த தவறை திசை திருப்பும் வேலை. வரவேற்பது இந்த செயலுக்கு பொருந்தாது. காலையில் தொலைக்காட்சியில் பேசிய மகளிர் அணியை சேர்ந்த தலைவி அந்த சம்பவம் பொள்ளாச்சியில் நடந்த நேரத்தில் அதை மறைக்க அப்போதைய அண்ணா திமுக அரசு முற்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் இது முறியடிக்கப்பட்டது என கூறியுள்ளார். ஆகவே மக்கள் வெறுப்பாக உள்ளார்கள் என்பதை இதை காட்டுகிறது'' என்றார்.