தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க. கூட்டணி நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும், அ.தி.மு.க. இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் கைப்பற்றும். அந்த வகையில், தி.மு.க. மூன்று இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது. அதில், அக்கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் ப.சிதம்பரம் தனது வேட்பு மனுவை, சட்டமன்றச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் இன்று (30/05/2022) மதியம் 12.00 மணிக்கு வழங்கினார். அதேபோல், அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.