ADVERTISEMENT

“எங்கள் கருத்து தெளிவாகியுள்ளது; தூண்டிவிடுபவர்கள் சிந்திக்க வேண்டும்” - கனிமொழி எம்.பி

11:30 PM Jan 09, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டசபையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கியது. கூட்டம் துவங்கியது முதலே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

ஆளுநர் உரையாற்றும்போது அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, “எப்பொழுதும் சட்டமன்றத்தில் இருந்தோ, நாடாளுமன்றத்தில் இருந்தோ எதிர்க்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால், இன்று ஆளுநரே வெளிநடப்பு செய்திருக்கிறார். இது ஆளுநர் எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற எங்கள் கருத்தை தெளிவாக்கி இருக்கிறது. அதனால், ஆளுநரை எதிர்க்கட்சி போல் செயல்படத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கக் கூடியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு செயல். பெரும்பான்மை மக்கள் தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று பெருமையோடு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெரும்பான்மை தமிழர்களுடைய மனதைப் புண்படுத்தக் கூடிய வகையிலும், அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் இவர்கள் அத்தனை பேரையும் இழிவுபடுத்தக் கூடிய வகையிலும் ஆளுநர் நடந்து கொண்டிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆளுநர் வெளியேறிச் சென்றது அப்பட்டமான மரபு மீறல். பாஜக எழுதிக் கொடுக்கக்கூடிய உரையைத் தான் குடியரசுத் தலைவர் படிக்கிறார். குடியரசுத் தலைவர் தான் நினைத்ததைத்தான் படிப்பேன் என்று சொன்னால் பாஜக அரசு ஏற்றுக்கொள்ளுமா? பாஜக ஆட்சியில் இல்லாத எல்லா மாநிலங்களிலும் ஆளுநரை ஆட்சிக்கு எதிராக பயன்படுத்தும் கருவியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யக்கூடிய பல ஜனநாயக விரோதச் செயல்களில் இதுவும் ஒன்று. ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய செயலைப் பற்றி; மக்களுக்குச் செய்திருக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பேசத்தான் செய்வார்கள். ஆனால், ஆளுநர் பதவியை எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் போல் மாற்ற நினைப்பது எந்த விதத்தில் நியாயம்” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT