மன்னிப்பை மனுவாக தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பு மறுப்பு

OPS's refusal to file apology petition

அதிமுக பொதுக்குழு விவகாரத்தை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிய விவகாரத்தில் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ் தரப்பு, அதனை மனுவாக தாக்கல் செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இந்த வழக்கை கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இருந்து மாற்றக்கோரி தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு நேற்று முறையிட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு இன்று மன்னிப்பு தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே வாதிட விரும்புவதாகவும் ஓபிஎஸ் தரப்பு விருப்பம் தெரிவித்தது.

இதையடுத்து, ஓபிஎஸ்ஸின் நிலைப்பாட்டை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை சிறிது நேரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார். வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியபோது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைமை நீதிபதியிடம் முறையிட்டதை மட்டும் திரும்பப்பெற மனு தாக்கல் செய்வதாகவும் ஓபிஎஸ் தெரிவித்த மன்னிப்பை மனுவாக தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை மீண்டும் சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe