OPS Speech at Tamil Nadu Assembly

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது திமுக அரசு. இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு மத்திய அரசிடம் தமிழக அரசு விவாதித்ததா? என்ற கேள்வியை எழுப்பினார்.

Advertisment

அப்போது எழுந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “வேளாண் சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு தருகிறதா? எதிர்க்கிறதா?” என்ற கேள்வியைக் கேட்டபோது, “இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்ததும் பதில் சொல்கிறேன்” என்று மழுப்பினார்.

Advertisment

ஆனாலும் அதில் திருப்தியடையாத துரைமுருகன், “அதிமுக ஆட்சியின் போது, எத்தனை முறை ஒன்றிய அரசுக்கு வேளாண் சட்டங்கள் குறித்து கடிதம் எழுதப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு நேரடியாக பதில் சொல்லமுடியாமல் தவித்தார் ஓ.பி.எஸ். அதனை தனது பாணியில் வெளிப்படுத்தும் வகையில், “நதியினில் வெள்ளம்; கரையினில் நெருப்பு; இரண்டுக்கும் நடுவில் இறைவனின் சிரிப்பு! இதுதான் என்னுடைய நிலைமை! இது, அவை முன்னவருக்குத் தெரியும்” என்று சொல்லி, தற்போதைய தனது சூழ்நிலையை வெளிப்படுத்தினார் ஓ.பி.எஸ். இதனையடுத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கும் வகையில் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

Advertisment