OPS in serial testing; Tragedy to continue in Karnataka elections!!

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இரு கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Advertisment

தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் போட்டியிடவுள்ளது. கர்நாடகத் தேர்தலில் முன்னதாக கூட்டணியில் இணைய அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு போட்டியிட வேண்டாம் கூட்டணிக்கு ஆதரவு மட்டும் அளித்தால் போதும் என்று பாஜக தலைமை கூறிவிட்டதாகத் தகவல் கசிந்தது. மேலும் பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலில் அதிமுகவிற்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நேற்று எடப்பாடி தலைமையிலான அதிமுக தரப்பு, கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் அன்பரசன், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தது. ஆனால் அந்தத் தொகுதியில் ஏற்கனவே பாஜக தனது வேட்பாளராக முரளி என்பவரை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஓ.பன்னீர்செல்வமும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு தனது வேட்பாளரை அறிவித்தார். புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிட இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. அன்பரசனுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் இருந்து நெடுஞ்செழியன் களமிறங்குகிறார். புலிகேசி நகர் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஓபிஎஸ் தரப்புமேலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்பாளரை அறிவித்தது. கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் என்பவரும் காந்தி நகரில் குமார் என்பவரும் போட்டியிடுவார்கள் என ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. கோலார் தங்கவயலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட இருக்கும் ஆனந்தராஜ், ஓபிஎஸ் அணியின் கர்நாடக மாநிலத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குமார், ஓபிஎஸ் அணியின் கர்நாடக மாநிலச் செயலாளராக உள்ளார். வேட்புமனுத் தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையும் நிலையில் மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் ஆனந்தராஜன் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. ஆனந்தராஜின் மனுவை நிராகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அவர் தாக்கல் செய்த மனுவில் பல்வேறு தவறுகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புலிகேசி நகரிலும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பு சார்பில் புலிகேசி நகரில் வேட்பாளராக நியமனம் செய்யப்பட்ட எம்.நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எம்.நெடுஞ்செழியனின் மனு முழுமையாக கையெழுத்திடப்படாததால் மனுவை நிராகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.