Advertisment

“அனைத்து பாலியல் வழக்குகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” - ஓ.பி.எஸ்.!

OPS says Steps should be taken to quickly conclude all cases

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 32) என்பவரை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி கைது செய்தனர். இந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (02.06.2025) தீர்ப்பு விவரங்கள் அறிவிக்கப்பட்டன். அதில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி ராஜலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார்.

அதோடு ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு படித்து வரும் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒட்டுமொத்தமாக 90,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

மேற்படி வழக்கில் ஐந்தே மாதத்தில் குற்றவாளிக்கு எப்படி தண்டனை பெற்றுத் தரப்பட்டதோ, அதே போன்று அனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைந்து தண்டனையை பெற்றுத் தரும்பட்சத்தில், பாலியல் வன்கொடுமைகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கும் சூழ்நிலை உருவாகும். எனவே, அனைத்து பாலியல் வழக்குகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Anna University case court judgement mk stalin O Panneerselvam
இதையும் படியுங்கள்
Subscribe