Skip to main content

“சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயார்... ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை...” அதிமுகவில் முரண்பாடு... ஸ்டாலின் பிரச்சாரம்..!

Published on 26/03/2021 | Edited on 27/03/2021

 

ops said palanisamy not accept sasikala to involve politics stalin on campaign

 

திருச்சியில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (26.03.2021) திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, “உற்சாகமான வரவேற்புக்கு மிக்க நன்றி. உங்களை நாடி, உங்களைத் தேடி, உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். நேருவை குறித்து நான் எதுவும் உங்களிடம் சொல்லத் தேவையில்லை. எந்தப் பணியைக் கொடுத்தாலும் முத்திரைப் பதிப்பவர். தேர்தலுக்காக மட்டும் நான் உங்களைச் சந்திக்க வரவில்லை. உங்களுடைய சுக, துக்கங்களில் பங்கு கொள்வேன் என்ற உரிமையுடன் வந்திருக்கிறேன். 

 

திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்தும் மதங்களின் மாண்பைக் காப்பது. கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று மோடி கூறியிருந்தார், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு 150 ரூபாய் கூட அவர் நம்முடைய கணக்கில் போடவில்லை. ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு இறந்துபோனார். அவருடைய மறைவுக்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவது மட்டுமே அவர்களுடைய இலக்காக இருந்தது. ஓபிஎஸ் தர்மயுத்தம் நாடகம் நடத்தியதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

 

ops said palanisamy not accept sasikala to involve politics stalin on campaign

 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓபிஎஸ் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது ‘நாங்கள் கூட சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை’ என்று கூறியிருக்கிறார். இன்றுவரை அந்தக் கட்சிக்குள் தொடர்ந்து பல கருத்து முரண்பாடுகளும் உட்கட்சிப் பிரச்சனையும் நீடித்து வருகிறது என்பதை ஒபிஎஸ் உறுதி செய்திருக்கிறார். விவசாயக் கடன் தள்ளுபடியைப் பொருத்தவரை, கிராமசபை கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்தபோது விவசாயக் கடனை தள்ளுபடி செய்வேன் என்று கூறிய அடுத்த சிலமணி நேரங்களில், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

 

அதிலும் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் 5 ஆயிரம் கோடி மட்டுமே தள்ளுபடியாகும் நிலை உருவாகியுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரம் கோடி ரூபாயை திமுக ஆட்சி அமைந்தவுடன் அவற்றையும் தள்ளுபடி செய்வேன். இப்படி அநேக திட்டங்களை திமுக அறிவித்த பிறகு அவற்றைக் காப்பியடித்து தங்களுடைய தேர்தல் அறிக்கையாக கொடுத்துவரும் இந்த அரசை தூக்கி எறிய நீங்கள் முயல வேண்டும். இந்த ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய நீங்கள் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். அந்தந்த தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வளர்ச்சிகளை நிச்சயம் இந்த வேட்பாளர்கள் உங்கள் அனைவருக்கும் நிறைவேற்றிக் கொடுப்பார்கள். எனவே தேர்தலில் வாக்களிக்க ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உங்களுடைய வாக்கு உதயசூரியனுக்கு இருக்கட்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்