Skip to main content

ஓ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
OPS Prosecution on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது.

இத்தகைய சூழலில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி  வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று (30,03.2024) வந்திருந்தனர். அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு தயாராக நின்ற பா.ஜ.க. மகளிர் அணியை சேர்ந்த மூன்று பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது ஒ.பி.எஸ். தனது பாக்கெட்டிலிருந்து இருந்து சில 500 ரூபாய் தாள்களை எடுத்து ஆரத்தி எடுத்து வரவேற்ற பா.ஜ.க. மகளிர் அணியை சேர்ந்த மூன்று பெண்களுக்கும் ரூ.1500 கொடுத்து விட்டு உள்ளே சென்றார்.

தேர்தல் விதிமுறைகளின் படி ஆரத்தி தட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிற நிலையில் அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஒ.பன்னீர்செல்வம் பணம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியானதையடுத்து ராமநாதபுரம் தொகுதி அறந்தாங்கி பகுதி தேர்தல் ஒளிப்பதிவு கண்காணிப்பு அலுவலர் அருள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே கூட்டம் நடத்தியிருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்தபோது பணம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறும் வகையில் ஆரத்திக்கு பணம் கொடுத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஓ.பி.எஸ். மீது அறந்தாங்கி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்