
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி நேற்று (13.05.2025) காலை 10.30 தீர்ப்பளித்தார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி 9 குற்றவாளிகளுக்ம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வழக்கிலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது’ எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அபராதத்துடன் கூடிய சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இனி வருங்காலங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களில் எவரும் ஈடுபடாத வகையிலான ஓர் அச்சத்தை இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏற்படுத்தும்.
இதேபோன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த முக்கியமான வழக்கில் திறம்பட செயல்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.