OPS had a darshan of God in his ancestral temple

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கியிருந்த நிலையில், இம்முறையும் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதேசமயம் இவரை எதிர்த்து நேரடியாகவே அதிமுக களமிறங்கவுள்ள நிலையில், வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. விருப்ப மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் அவைத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 106 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சிறப்பு தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செண்பகத்தோப்பில் அமைந்துள்ள அவரது குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலில் வழிபட்டார்.தேர்தலின் போது பயன்படுத்த இருக்கும் பிரச்சார வாகனத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜைகளை செய்தார். ஒவ்வொரு தேர்தலிலும் பிரச்சாரத்திற்கு செல்லும் முன்பு குலதெய்வம் பேச்சியம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

வழிபாட்டிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடத்தேர்தலுக்கான வேட்புமனு வருகிற 31 ஆம் தேதி முதல் துவங்குவதால் அதிமுக சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” எனவும் தெரிவித்தார்.