Skip to main content

புறக்கணிக்கும் பாஜக? களமிறங்கும் ஓபிஎஸ்? - முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பன்னீர்செல்வம் தரப்பு

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

OPS consults with his supporters in AIADMK

 

அதிமுக ஈபிஎஸ் தரப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இரட்டை இலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற பரப்புரையை மேற்கொள்வேன் என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்பிலிருந்தும் பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் ஓபிஎஸ் தரப்பு அனுப்பிய பேச்சாளர்கள் பட்டியல் ஏற்கப்படவில்லை. 

 

செய்தியாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசிய ஓபிஎஸ் தரப்பு மருது அழகுராஜ், “பிரச்சாரம் என்பது ஈரோட்டிற்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. காணொளி வாயிலாகவும் மேற்கொள்ளலாம்” எனக் கூறி இருந்தார். தொடர்ந்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ஈபிஎஸ் தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பாஜக - அதிமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று இருந்தனர். இந்நிகழ்வில் ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடப்படவில்லை. 

 

இந்நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில் சென்னை எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 20-02-2023 திங்கட்கிழமை காலை 10-00 மணிக்கு நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கூட்டம் 20-02-2023 அன்று மாலை 4 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பிரச்சாரத்தில் தன் பங்கு என்ன என்பது குறித்தும் தமிழக பாஜகவின் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

 

மேலும், பிப்ரவரி 24 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருவதால் தங்கள் தரப்பு நிகழ்ச்சிகளையும் ஆலோசிக்கலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாள் குறித்தான அழைப்பு கடிதத்தை ஈபிஎஸ் தரப்பு சில தினங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்