அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என்று பிரிந்தனர். அப்போது சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர். பின்பு ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். அவர் மீண்டும் அதிமுகவில் இணைவதை பிடிக்காமல் 18 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு சென்றனர். பின்பு தினகரனின் அணிக்கு சென்ற 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியும் பறிபோனது. இந்த நிலையில் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

ops

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணி ஓய்வு பெற்றதால், இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை சீக்கிரமாக விசாரிக்க வேண்டுமென திமுகவின் தங்கதமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனையடுத்து திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரிக்க புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.