Skip to main content

மாநகராட்சி மேயர் தேர்தல் ! தேதி அறிவிக்க எடப்பாடி ஆலோசனை !

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

ஊரக உள்ளாட்சிகளுக்கான நேரடி தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி அதிக இடங்களைக் கைப்பற்றிய திமுகவை, மறைமுக தேர்தலில் தோற்கடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தலை விரைந்து நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

 

ops and eps plan for tamilnadu corporation election

 

 

மூன்று வருடங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என எடப்பாடிக்கு நம்பிக்கைக் கொடுத்தவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. அதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது ஆளும் அதிமுக அரசு ! இந்த நிலையில், மேயர் தேர்தலை நடத்துவது குறித்து அமைச்சர் வேலுமணியிடம் நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்எடப்பாடி பழனிச்சாமி.

மிக ரகசியமாக நடந்த அந்த ஆலோசனை குறித்து விசாரித்த போது, ‘’ உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஊராட்சிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், மாநகராட்சிகள் என மூன்று பகுதிகளாக நடத்த திட்டமிட்டார் வேலுமணி. அதனை எடப்பாடி, ஓபிஎஸ் உள்பட சீனியர் அமைச்சர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஊராட்சிகளில் கிடைக்கும் ரிசல்ட்டின் படி நகராட்சிகளுக்கும், நகராட்சிகளில் கிடைக்கும் ரிசல்ட்டின்படி மாநகராட்சிகளுக்கும் தேர்தலை நடத்துவது அல்லது தள்ளிப்போடுவது என்பதுதான் திட்டம். அந்த வகையில், நகராட்சி தேர்தலை ஏப்ரல் அல்லது மே மாதத்திலும், மாநகராட்சிக்கான மேயர் தேர்தலை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திலும் நடத்த தீர்மானித்திருந்தனர். தற்போது இந்த திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.

அதாவது, பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்துக்குமான தேர்தலை இணைத்து ஒரே பகுதியாக நடத்திடலாம் என எடப்பாடியும் வேலுமணியும் முடிவெடுத்துள்ளனர். மறைமுக தேர்தலில் திமுகவை வீழ்த்தியதன் மூலம் கிடைத்த நம்பிக்கைதான் இதற்கு காரணம். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நடக்கும் குழப்பத்தை எடப்பாடி உன்னிப்பாக கவனித்து வருகிறார். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழட்டி விடப்படும் அல்லது காங்கிரசே வெளியேறும் சூழலை திமுக ஏற்படுத்தும். இதில் எது நடந்தாலும் அது அதிமுகவுக்கு லாபம்தான் என கணக்குப் போட்டுள்ளனர். அதேசமயம், திமுக கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும் அதுவும் தங்களுக்கு நன்மையைத்தான் கொடுக்கும் எனவும் யோசித்துள்ளனர்.

அந்த வகையில், மறைமுகத் தேர்தலில் அதிமுக எடுத்த பல வியூகங்கள் எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதனால், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊராட்சி தேர்தலோடு மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர் தேர்தலையும் உடனடியாக நடத்திடலாம் என முடிவெடுத்துள்ளனர். அதற்கேற்ப, பொங்கல் பரிசு 1000 ரூபாய் வாங்காமல் இருப்பவர்களின் வீடு தேடி கொண்டுபோய் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கு வசதியாகத்தான் பொங்கல் பரிசு வழங்கும் காலத்தை நீட்டித்துள்ளனர். பொங்கல் பரிசு அனைவருக்கும்
கொடுத்து முடித்ததும் தேர்தல் தேதி அறிவிக்கக்கூடும். 

அநேகமாக, வருகிற 27-ந்தேதி இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவரலாம். தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோடு (தேர்வு காலக்கட்டம் என்பதால்) கலந்துப் பேசி, தேர்தல் தேதியை முடிவு செய்யவும் ஆலோசனை நடந்துள்ளது ‘’ என்று விவரிக்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமான அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

 

 

Next Story

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை; 5 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

West Bengal Local Government Elections inceident Repolling in 5 districts

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் கடந்த சனிக்கிழமை (ஜூலை 08) ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

இருப்பினும் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச் சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச் சாவடியை சூறையாடினர். அதே பகுதியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவங்களும் நடைபெற்றது. மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சா வாக்குச் சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு வாக்குப் பெட்டிகளைக் குளத்தில் வீசினர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புருலியா, பிர்பூம், ஜல்பைகுரி, நதியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று  நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.