Skip to main content

உள்ளாட்சித் தேர்தல் என்றும் பாராமல் அதிரடி நடவடிக்கை எடுத்த ஓ.பி.எஸ். & இ.பி.எஸ்!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

OPS and EPS Announce that six ward members has been excluded from ADMK

 

உள்ளாட்சித் தேர்தல் என்றும் பாராமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் எடுத்திருக்கும் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

தமிழ்நாட்டில் விடுபட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், வரும் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்தித்த பாமக, இந்த உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கப்போவதாக அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை உள்ளாட்சித் தேர்தலில் சரிகட்ட எண்ணிக்கொண்டிருக்கும் அதிமுகவினருக்கு இந்த முடிவு ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் அதிமுக, பாஜகவுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராகிவருகிறது. ஆனால், அதிமுகவினர் சிலரே பாஜக, அதிமுக கூட்டணியை விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் 6 வார்டு உறுப்பினர்களை அதிமுகவிலிருந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் நீக்கியிருப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த காரணத்தினாலும், ஊராட்சி ஒன்றியக்குழு 1வது வார்டு உறுப்பினர் இ. ஜெகதீஸ்வரன், 3வது வார்டு உறுப்பினர் பி.எஸ். அந்தோணி, 4வது வார்டு உறுப்பினர் கே. மூக்கம்மாள், 5வது வார்டு உறுப்பினர் ஜி. அறிவழகன், 6வது வார்டு உறுப்பினர் ஆர். செல்வி, 7வது வார்டு உறுப்பினர் எம். கலைச்செல்வி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர் ஆர். சந்திரசேகரன், உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் ஆர். பிரசாத், டி. கெப்புராஜ் ஆகியோர் இன்று (நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதிமுகவின் இந்த அறிவிப்பு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, தேனி மாவட்ட அதிமுகவில் பதற்றத்தையும், மாவட்ட அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.