“Opening of schools should be postponed by a week” - Bamaga founder Ramadoss

வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களைக் காக்க தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது, “தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜூன் 1 ஆம் தேதி அரசுப் பள்ளிகளைத்திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

Advertisment

தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதைத்தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளன. அத்துறைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜூன் 1 ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜூன் 2வது வாரத்திற்குப் பிறகு தான் திறக்கப்பட உள்ளன. தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒரு மாதம் மட்டுமே விடுமுறை அளித்து ஜூன் முதல் நாளிலேயே திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டுபள்ளிகள் திறப்பை தீர்மானிக்க வேண்டும்.

கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.