Skip to main content

“கொஞ்சம் இங்க பாரு தம்பி” - பாட்ஷா படப் பாணியில் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த ஓ.பி.எஸ்

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

o panneerselvam talk about jayakumar and admk

 

ஓ.பி.எஸ் தனது பலத்தை நிரூபிக்கவும் அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார். பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். 

 

இதில் பேசிய ஓ.பி.எஸ், “நமது இயக்கம் நெஞ்சம் நிமிர்ந்து நிற்க காரணமான தொண்டர்களுக்கு வணக்கம். இது ஒரு சாதாரண இயக்கம் அல்ல; எம்.ஜி.ஆர் துவக்கிய இயக்கம்; எவராலும் அழிக்க முடியாத அற்புத சக்தி நம் இயக்கம். வீழ்வது நாம் ஆகினும் வளர்வது நம் இயக்கமாக இருக்கட்டும்.  இயக்கத்தின் தலைமை பொறுப்பிற்கு யார் வர வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை தொண்டர்களுக்கு மட்டுமே என்று எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அதை ஜெயலலிதா பின்தொடர்ந்தார். இது தான் வரலாறு.

 

சமுதாயச் சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் பெரியார். தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பட்ட இயக்கம்; ஒரு கட்சி 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டது என்றால் அது நம் கழகம் மட்டும் தான். 30 ஆண்டுகளாக எத்தனையோ பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் செய்த சூழ்ச்சிகளை எல்லாம் வென்றார்கள் நம் அம்மா. பன்னீர்செல்வத்தை தொண்டனாகப் பெற்றது என் பாக்கியம் என்றார் அவர். நிதி அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பொருளாளர் என பல பதவிகள் கொடுத்தார் அம்மா. 2 கோடியாக இருந்த கட்சி நிதி 250 கோடியாக மாறியது.

 

இன்று ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிக்கொண்டுள்ளனர். கட்சியின் நிதியை முறையாகச் செலவு செய்யாதவர்கள் மீது தண்டனை பெற்றுத் தரப்படும். ஐயா பழனிசாமி அவர்களே, உங்களுக்கு யார் பதவி கொடுத்தார்கள்? சின்னம்மா முதல்வர் பதவியைக் கொடுத்தார்கள். நாம் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய துரோகி நீங்கள். வரலாறு உங்களை மன்னிக்குமா? தனக்குத் தானே பொதுச்செயலாளர் என்று பதவி கொடுத்துக் கொண்டு... ஐயோ..! எம்.ஜி.ஆரின் தொப்பியை போட்டுக்கொண்டு போஸ் கொடுக்கிறீங்களே... நீங்களும் புரட்சித்தலைவரும் ஒன்றா? அவரது கால் தூசிக்கு நீங்கள் ஆக மாட்டீங்க.. என்ன திமிரு உங்களுக்கு.. கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு நிர்வாகிகளை வாங்கியுள்ளீர்கள். (இங்கு ஓ.பி.எஸ் ஒருமையில் பேசினார். நாகரீகம் கருதி அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது).

 

அப்படிப்பட்ட இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகியை கட்சியில் இருக்கவிடலாமா? தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டாயிரம் கேடிகள், ரவுடிகளை மண்டபத்தில் கொண்டு வந்து விட்டு நீங்கள் நடத்தியது பொதுக்குழுவா? வரவு செலவை நான் வாசிக்க ஆரம்பித்த போது சி.வி.சண்முகம்.. ஒரு லூசு.. எல்லாவற்றையும் ரத்து செய்யுங்க என்றார். 9 பேர் கொண்ட தலைமை கழகம் தான் நான் வாசித்ததை உருவாக்கினர். சி.வி.சண்முகம்... பணத்திமிரு  அவ்வளவும்.

 

o panneerselvam talk about jayakumar and admk

 

ஜெயக்குமார்... அவர் ஒரு லூசு.. என்னை தனியாக டீ ஆத்துகிறார் என்கிறார். இன்று பார்த்தீங்களா கூட்டத்தை! இது 33 மாவட்டம் தான். இன்னும் 55 மாவட்டம் இருக்கு தம்பி. தொண்டர்கள் கூடுகின்ற மாநாடு இது போல் நடக்கும். திருச்சியில் ஒரு குறை இருக்கு... கடல் இல்லை. ஆனால், அதையும் நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள். அம்மா இங்கு கூட்டம் நடத்தித் தான் முதல்வராக ஆனார். நாம் நடத்துகிறது தர்மயுத்தம். தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்மயுத்தம். உங்களின் வலிமையோடு திருச்சி மாநகரில் விதையை உருவாக்கி உள்ளோம். இது பூ பூத்து... காய் காய்த்து... மீண்டும் தொண்டர்களிடமே கொடுக்க வேண்டும். எடப்பாடி ஜமீன்தார்கள், பணக்காரர்கள் தலைமைக்கு வர வேண்டும் என்று சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார்.

 

சட்ட விதியை திருத்திய எடப்பாடிக்கு சாவு மணி அடித்தே தீர வேண்டும். உங்களை நம்பித்தான் இந்த தர்மயுத்தத்தை துவக்கி உள்ளோம். நம் மீது தண்ணீர் பாட்டில் அடித்தவர்கள்; இவர்களுக்கு எல்லாம் பதில் கொடுப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். சகோதர பாச உணர்வோடு அம்மாவும் எம்.ஜி.ஆரும் வளர்த்தது போல் வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எடப்பாடியின் கம்பெனியில் நம் இயக்கம் இருக்கக் கூடாது. அதனை நாம் மீட்க வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“முதல்வரைப் பாராட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை” - மேயர் பிரியா சாடல்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
chennai Mayor Priya criticized Edappadi Palaniswami

பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்குப் பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது. மேலும் அம்மா உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் சுமார் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சென்னை மாநகராட்சி 122ஆவது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அம்மா உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றைச் சோதனை செய்தார். இதனை, கடந்த மூன்றாண்டுகளில் எத்தனை முறை உணவின் தரத்தை அதிகாரிகளோ, திமுக அமைச்சர்களோ சோதித்தனர் என்று முதலமைச்சர் விளக்குவாரா ? ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை 19.7.2024 அன்று திமுக அரசின் முதலமைச்சர் அரங்கேற்றியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில், சென்னை மேயர் பிரியா ராஜன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையைப் பாராட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர்  திகழ்கிறார்கள்; அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.

திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்.” என்று கடுமையாகச் சாடியுள்ளார். 

Next Story

“அம்மா உணவகங்களைத் தரத்துடன் இயக்க வேண்டும்” - முதல்வருக்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
EPS insistence on CM for most runs amma restaurants with quality

ஜெயலலிதா ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயங்க தமிழக முதல்வருக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் 2021 மே மாதம் வரை, குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் நகரப் பகுதிகளில் வாழ்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளர்களது அன்னலட்சுமியாக தமிழகம் முழுவதும் சுமார் 664 அம்மா உணவகங்கள் நகரப் பகுதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் திறக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வந்தன.

அம்மா உணவங்களில் விற்கப்படும் உணவு வகைகளின் சுவை மற்றும் தரத்தை ஜெயலலிதாவும் அவர்வழியில்  ஆட்சி செய்தபோது நானும், அமைச்சர் பெருமக்களும் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்தோம். சுவை மற்றும் தரத்தை ஆய்வு செய்தபின் தக்க ஆலோசனைகள் வழங்கி அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டன என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 

2021-இல் ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு அம்மா உணவகங்களை திமுக நிர்வாகிகள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் இடித்துத் தள்ளினர். அம்மா உணவகங்களில் பணிபுரிந்தவர்களை மூன்றில் ஒரு பங்காக குறைத்தும், அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமலும், தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தரமாக வழங்காமல், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகள் வயிராற உண்ணும் உணவின் தரத்தைக் குறைத்து பல அம்மா உணவகங்களுக்கு மூடு விழாவும் நடத்தியது திமுக அரசு.

திமுக அரசின் மேற்கண்ட செயல்பாட்டினை உடனடியாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாக கடுமையாக எதிர்த்தேன். அதனையடுத்து, அம்மா உணவகங்களை மூடும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தியது திமுக அரசு. உண்மை நிலை இவ்வாறு இருக்க, நிர்வாகத் திறனற்ற  திமுக அரசின் முதலமைச்சர் 19.7.2024 அன்று, தனது எக்ஸ் வலைத்தளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். மேலும், தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும்; அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததாக குறிப்பிட்ட  திமுக அரசின் முதலமைச்சர், உணவின் சுவையை சோதித்தார்.

முதலமைச்சர் ஆய்வுக்கு வருவார் என்று முன்னதாகவே அம்மா உணவகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அங்கு தரமாக உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. எஞ்சிய அம்மா உணவகங்களில் நேற்று நடைபெற்றதை போல் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனைமுறை உணவின் தரத்தை அதிகாரிகளோ, திமுக அமைச்சர்களோ சோதித்தனர் என்று முதலமைச்சர் விளக்குவாரா ? ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை 19.7.2024 அன்று திமுக அரசின் முதலமைச்சர் அரங்கேற்றியுள்ளார். ஜெயலலிதாஆட்சியில் சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் மூன்றாண்டுகளில் அதை உயர்த்தாமல், சுமார் 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளது இந்த திமுக அரசு.  முதல்வர் ஸ்டாலின் இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார்?

இனியாவது வாய் பந்தல் போடாமல், உண்மையிலேயே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு சுவையுள்ள உணவு வகைகளை வழங்கவும், மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன், மேலும் புதிய அம்மா உணவகங்களை, ஜெயலலிதா ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயங்க நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.