ADVERTISEMENT

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்!

12:41 PM Mar 23, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

2023 - 2024ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தொடர் துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கமளித்தார். இதனை அடுத்து, கிருஷ்ணகிரியில் கொலை செய்யப்பட்ட ஜெகன் குறித்த விவகாரத்தை கவன ஈர்ப்பு தீர்மானமாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

இதன் பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்த போது பேசிய அவர், “ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்து இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்; அந்த வேதனையோடுதான் உரையை தொடங்குகிறேன்; பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்றே 10,735 மின்னஞ்சல்கள் வரப்பெற்றன; அதில் 27 மட்டுமே ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆதரவாக வந்துள்ளன. அரசியலில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்; ஆனால் மனித உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதில் இதயம் உள்ள யாருக்கும் மாறுபட்டக் கருத்து இருக்க முடியாது; இருக்கவும் கூடாது; மாநிலத்தில் உள்ள மக்களைக் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.. மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு; மனசாட்சியை உறங்கச் செய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மசோதா குறித்து பேசுவதற்கு அனைத்துக் கட்சிகளிலும் உறுப்பினர் ஒருவரை பேசுமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது; ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களை ஆளுநர் ஏன் சந்திக்க வேண்டும்? அந்த சந்திப்பில் உள்நோக்கம் இருக்குமோ என சந்தேகம் உள்ளது; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறினார்.

கொங்கு மக்கள் தேசியக் கட்சித் தலைவரான ஈஸ்வரன், “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பது படிக்காத பாமர மக்கள் கூட ஏற்கும் கோரிக்கை; ஆன்லைன் ரம்மி என்பது ‘கேம் ஆஃப் சான்ஸ்’தானே தவிர, கேம் ஆஃப் ஸ்கில்’ அல்ல; ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது” எனக் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ், “ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தும் நிறுவனங்களிடம் கருத்து கேட்டுள்ளார்; பேரவையில் ஆளுநருக்கான அனைத்து மரியாதையும் வழங்கப்படுகிறது; ஆனால், பேரவையிலேயே ஆளுநர் மரபுகளை மீறுகிறார்; ஆளுநரின் அதிகாரம் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ளது; ஆனால், அவர் அதை தொடர்ந்து மீறுகிறார்; ஆளுநரின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்” என்றார்.

அவை முன்னவரான துரைமுருகன், “ஆளுநர் செய்தது பெரிய தவறு என்பதை எடுத்துரைத்து விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளது; சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிலுவையில் வைத்துள்ளதால் ஆளுநரை விமர்சிக்கும் உரிமை பேரவைக்கு உள்ளது” எனக் கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT